சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தில் 9 மில்லியன் ரூபாய் செலவில் புதிய வகுப்பறைக் கட்டிடம் திறப்பு

சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தில் குவைத் நாட்டின் அனுசரணையில் செயற்படும் அல்-ஹிமா இஸ்லாமிக் சேர்விஸினால் சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு வகுப்பறைகளைக் கொண்ட “Abdul Azeez Naser Al Marzook Building” இன்று (17) மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் திருமதி M.H. நூறுல் ஹிமாயா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ அபூபக்கர் அதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மேலதிக இடவசதியை வழங்குவதுடன், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர் முஹம்மட் அபாம் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் S. மகேந்திரகுமார், அல்-ஹிமா இஸ்லாமிக் சேர்விஸின் இலங்கைக்கான பணிப்பாளர் அஷ்ஷெய்க் M.A.A. நூருல்லாஹ் (நழீமி), சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.T. ஜானோபர், மஜ்லிஸ் அஷ்ஷூரா தலைவர் A.I. ஜப்பார், நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் M.I. இஸ்ஹாக் நழிமி, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் Y.B. நவாஸ், பாடசாலையின் பிரதி அதிபர்களான A.R.M. ரஸ்லீன் மற்றும் M.H. சல்பியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.














தில்சாத் பர்வீஸ்
