உள்நாடு

இலங்கையை பிராந்தியத்தின் நிதித் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கையை தெற்காசியா மற்றும் பரந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான நம்பகமான நிதித் தொழில்நுட்ப நுழைவாயிலாக ஸ்தானப்படுத்த வேண்டும். டிஜிட்டல் மாற்றத்திற்கான நீண்ட கால தேசிய அணுகுமுறையொன்று இதற்கு அவசியமாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இன்று (16) நடைபெற்ற 2026 இலங்கை நிதித் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

டிஜிட்டல் நிதிமயமாக்கலானது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தாண்டி, உயர்வான உற்பத்தித்திறன், செயயற்றிறன் மற்றும் உள்ளடக்கத்திற்கு பங்களிப்புச் செய்யும் விதமாக அமைந்து காணப்பட வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது நுகர்வோர் பாதுகாப்பு, நிதி நிலைத்தன்மை, சைபர் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு என்பன பலப்படும் அதேவேளை, டிஜிட்டல் நிதிக் கட்டமைப்புகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது இங்கு முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

பௌதீக பிணையங்களுக்குப் பதிலாக பொருளாதார செயற்பாடுகள் மற்றும் பணப் பரிமாற்றங்களைப் பயன்படுத்தி கடன் தகுதியினை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள், விவசாயிகள், பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் முறைசாரா வியாபார முயற்சியாண்மைகளுக்கான மூலதனத்திற்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கு டிஜிட்டல் நிதிமயமாக்கல் அவசியமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இலங்கையின் டிஜிட்டல் மற்றும் நிதித் தொழில்நுட்பக் கொள்கைகளின் நீண்டகால நிலைதன்மையை ஸ்தாபிக்கும் நோக்கில் பாராளுமன்றம், அரசாங்கம், துறைசார்ந்தோர், கல்வித்துறையினர் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய டிஜிட்டல் இணக்கப்பாடொன்றை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்தார்.

சர்வதேச சந்தைக்கான தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு இலங்கைத் தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்கும் அதேவேளையில், பாதுகாப்பான டிஜிட்டல் அடையாளம், இணைக்கப்பட்ட கட்டண முறைகள், நம்பகமான தரவுப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் பொதுச் சேவைகள் உள்ளிட்ட வலுவான டிஜிட்டல் பொது உட்கட்டமைப்புக்கான அணுகல் எமக்கு தேவைப்படுகின்றன. ஒரு நாடாக எமது இலக்கு நம்மிடம் உள்ள பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவது மாத்திரமன்றி, நமக்குத் தேவையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் இருக்க வேண்டுமென எதிர்க்கட்சித் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துநர்கள், நிதி நிறுவனங்கள், தொழில்நுட்பத் தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பின்டெக் (Fintech) புத்தாக்குநர்களை ஒன்றிணைத்துக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை பின்டெக் மாநாடு (Sri Lanka FinTech Summit 2026) செப்டம்பர் 16-17 ஆம் திகதிகளில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெறுகின்றது. “டிஜிட்டல் நிதிமயமாக்கலின் அடுத்த கட்டத்தை துரிதப்படுத்துதல்: நம்பிக்கை, அளவீடு மற்றும் தாக்கம்” என்பதே இம்மாநாட்டின் கருப்பொருளாக அமைந்து காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *