உள்நாடு

மேல் மாகாண இஸ்லாமிய கலை, கலாசார விழா பாணந்துறையில் !

மேல் மாகாணக் கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில், களுத்துறை வலய முஸ்லிம் பாடசாலைகள் ஒருங்கிணையும் “இஸ்லாமிய கலை, கலாசார விழா – 2026” வரும் செப்டம்பர் 16-ஆம் திகதி பாணந்துறை, சரிகமுல்லை ‘டாட்டா வரவேற்பு மண்டபத்தில்’ (Data Reception Hall) வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

இலங்கையின் முதல் இஸ்லாமியத் தமிழ் பேராசிரியரான ம.மு. உவைஸ் பிறந்த பாணந்துறை மண்ணில் நடைபெறும் இவ்விழாவில், மேல் மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன.

விழாவின் சிறப்பம்சங்கள்:

ஆன்மீக நிகழ்வுகள்:

மாணவர்களின் அல்குர்ஆன் பாராயணம் மற்றும் இறை புகழ்பாடும் ‘மர்ஹபா பைத்’.

கலாசாரக் கலைகள்:

அழுத்கம வீதிய மற்றும் கொழும்பு மகளிர் கல்லூரிகளின் ‘மலாய் நடனம்’, பேருவளை சீனங்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் ‘பல் துறை சார் கலாசார நடனம்’ மற்றும் ‘விருது’ கலை நிகழ்ச்சி.

வீரக்கலை: முஸ்லிம்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மாணவர்களின் ‘சீனடி வர்மக் கலை’ காட்சி.

முக்கிய விருந்தினர்கள்:

நிகழ்வின் பிரதம அதிதியாக மேல் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி இத்தமல்கொட கலந்துகொண்டு இறுதியுரையாற்றி விருதுகளை வழங்கவுள்ளார்.
மேலும், கௌரவ அதிதிகளாக மேல் மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எஸ். நஜீப், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்..பீ.எம். அஷ்ரஃப், கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் மற்றும் பேராசிரியர் எம். கபூர்தீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவிக்கவுள்ளனர்.
கல்விச் சமூகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பிக்கின்றனர்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *