உள்நாடு

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்

  • அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் அனுதாபச் செய்தி

பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமான தகவல் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும், இலங்கையிலுள்ள அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம், தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், அ.இ. இளம் எழுத்தாளர் சம்மேளனத் தலைவர் ‘கலையமுதன்’ எம். நிஜாமுதீன், ‘கலைப்பிரியன்’ ஐ.ஏ. காதிர் கான் ஆகியோர், இலங்கை வாழ் கலை உறவுகள் சார்பில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அனுதாபச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
1936 ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்ப் பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.

தனது பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களைக் கவர்ந்தவர்.

கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்த் தொண்டாற்றிய இவர், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியுள்ளார்.
கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதிலும் பேரும் புகழும் பெற்றவர்.

இதுவரை அவர் 12,000 க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் “பத்மஸ்ரீ விருது” உட்பட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

“அன்புத் தாய்மார்களே, அருமைப் பெரியோர்களோ, இனிய குழந்தைகளே” என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு அவர் சொந்தக்காரர்.

அந்தக் கணீர்க் குரலின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பட்டிமன்றக் கலைஞர்களுக்கும், கலை இலக்கிய உறவுகளுக்கும், அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் சார்பில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *