மன்னர் அப்துல் அஸீஸ் திருக்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களைப் பாராட்டி வாழ்த்திய பதில் தூதுவர்


“சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச திருக்குர்ஆன் போட்டி – 2026” இல் வெற்றி பெற்ற இலங்கை மாணவர்களை, இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர் யாசர் பின் அப்துர்ரஹ்மான் அல் – ஹஸ்மி, கொழும்பிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து, (07) திங்கட்கிழமையன்று பாராட்டி வாழ்த்தி கௌரவித்தார்.
இச்சந்திப்பின் போது, வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில், தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின்போது பேசிய பதில் தூதுவர் அல் – ஹஸ்மி அவர்கள்,
“புனித திருக்குர்ஆனுக்கு சேவை செய்வதிலும், அதன் ஹாஃபிழ்களை கௌரவிப்பதிலும் சவூதி அரேபியா உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தூரநோக்குத் தலைமையின் கீழ், இந்தப் போட்டிக்குக் கிடைக்கும் அரச ஆதரவும் மரியாதையும் மகா பெரியது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வெற்றியாளர்களின் இச்சாதனை, எதிர்கால இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் வலுவாகவும் அமையும். அத்துடன், திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கான ஆசையையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்றும் அவர் மகிழ்வோடு மேலும் சுட்டிக்காட்டினார்.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் சவூதியில் சிறப்பாக இடம்பெற்ற இந்த உலகளாவிய திருக்குர்ஆன் போட்டியில், 133 நாடுகளைச் சேர்ந்த 334 ஆண் ஹாஃபிழ்களும் மற்றும் பெண் ஹாஃபிழாக்களும் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
