உள்நாடு

பாங்கொக் சர்வதேச அறிமுக விழா GEM SRI LANKA 2027-ஐ உலகளாவிய அரங்கிற்கு கொண்டு செல்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

இலங்கையின் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இரத்தினக் கல் துறை, 2026 செப்டெம்பர் 6ஆம் திகதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது. இலங்கையின் முதன்மையான இரத்தினக் கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான GEM SRI LANKA 2027, இலங்கைக்கு வெளியே தனது முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச அறிமுக விழாவை தாய்லாந்தின் பாங்கொக்கில் நடத்தியது. Holiday Inn Bangkok Silom ஹோட்டலில் நடைபெற்ற இவ்விசேட நிகழ்வு, இலங்கையின் புகழ்பெற்ற இரத்தினக் கற்களையும் நாட்டின் உலகப் புகழ்பெற்ற இரத்தினக் கல் துறையையும் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தது.


250க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டனர். அரசாங்கப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், சர்வதேச கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், இரத்தினவியல் நிபுணர்கள் மற்றும் சர்வதேச இரத்தினக் கல் மற்றும் ஆபரணத் துறையின் முன்னணி பிரதிநிதிகள் இதில் அடங்கினர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி கலந்து சிறப்பித்தார். அவருடன் தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய E. A. S. விஜயந்தி எதிரிசிங்க, தேசிய இரத்தினக் கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி Dr. S. P. சாமிந்த, தாய்லாந்தின் கௌரவ செனட்டர் Pol. Lt. Gen. Boonchan Nuansai, Guild Gem Laboratories நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஸ்தாபகர் Ms. Ruby Liu, Guild Institute of Gemology நிறுவனத்தின் தலைவர் Mr. Andrew Lucas, Ceylon Gem & Jewellery Traders Association இன் தலைவர் Mr. Rizwan Nayeem, GEM SRI LANKA இன் தலைவர் Mr. Hilmy Cassim உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச தொழில்துறை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


பிரதம அதிதியாக உரையாற்றிய கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பாங்கொக் அறிமுக விழா ஒரு கண்காட்சியின் ஆரம்பம் மட்டுமல்ல எனவும், இலங்கையின் இரத்தினக் கல் மற்றும் ஆபரணத் துறையின் வலிமை, எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சர்வதேச போட்டித்திறன் மீதான நம்பிக்கையின் வலுவான வெளிப்பாடு எனவும் குறிப்பிட்டார். இலங்கை–தாய்லாந்து வர்த்தக உறவுகள், குறிப்பாக இரத்தினக் கல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கை வெறுமனே இரத்தினக் கற்களை வழங்கும் நாடாக மட்டுமன்றி, பொறுப்பான மூலப்பொருள் கொள்வனவு, பெறுமதி கூட்டல், சர்வதேச வர்த்தகம், முதலீடு, மற்றும் அறிவு ஆகியவற்றுக்கான உலகளாவிய மையமாக வளர வேண்டும் என்ற இலங்கையின் எதிர்கால நோக்கத்தையும் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய Ceylon Gem & Jewellery Traders Association இன் தலைவர் Mr. Rizwan Nayeem, GEM SRI LANKA கண்காட்சியின் சர்வதேச ரீதியிலான வளர்ந்து வரும் புகழை எடுத்துக்காட்டி, அதனை “உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரத்தினக் கல் கண்காட்சிகளில் ஒன்றாக” வர்ணித்தார். மேலும், இலங்கையின் முதன்மையான சர்வதேச இரத்தினக் கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியாக GEM SRI LANKA திகழ்வதையும் அவர் வலியுறுத்தினார். உலகளாவிய கொள்வனவாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களுக்கு இலங்கையின் சிறந்த இரத்தினக் கற்களை அறிமுகப்படுத்துவதோடு, இலங்கையின் இரத்தினக் கல் மற்றும் ஆபரணத் துறைக்கு புதிய சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இக்கண்காட்சி முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.


பாங்கொக்கில் நடைபெற்ற இவ்வறிமுக விழா மற்றுமொரு கண்காட்சியின் ஆரம்பமாக மட்டும் அமையவில்லை. இது இலங்கைக்கும் இலங்கையின் இரத்தினக் கல் துறைக்கும் பெருமைக்குரிய தருணமாக அமைந்தது. இலங்கையின் பல தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் Ceylon இரத்தினக் கற்களின் பாரம்பரியத்தை நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்று, உலகின் முக்கியமான இரத்தினக் கல் வர்த்தக மையங்களில் ஒன்றான பாங்கொக்கில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் இலங்கையின் தனித்துவமான நிற இரத்தினக் கற்களை அறிமுகப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது அமைந்தது.


“The Source. The Production. The Selection.” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற GEM SRI LANKA 2027, இலங்கையின் இரத்தினக் கல் துறையின் முழுமையான பயணத்தை வெளிப்படுத்துகிறது. இயற்கையின் மண்ணிலிருந்து பெறப்படும் அரிய இரத்தினக் கற்கள் முதல் அவற்றை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றும் நிபுணத்துவம், கைவினைத்திறன், அறிவு மற்றும் துல்லியமான தெரிவு வரையிலான முழுமையான செயல்முறையை இக்கருப்பொருள் பிரதிபலிக்கிறது.


இந்நிகழ்வில் சம்பிரதாய விளக்கேற்றுதல், தாய்லாந்து மற்றும் இலங்கையின் தேசிய கீதங்கள், GEM SRI LANKA 2027 இன் உத்தியோகபூர்வ அறிமுகம், விளம்பரக் காணொளிகள், Platinum, Premier ,Gold Sponsors கௌரவிப்பு, தொழில்துறை தலைமைத்துவக் கலந்துரையாடல், நிலைத்தன்மை தொடர்பான விளக்கவுரை மற்றும் சிறப்பு மேடை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து GEM SRI LANKA 2027 இன் பிரமாண்ட அறிமுகமும் Fellowship Dinner நிகழ்வும் நடைபெற்றன.


சர்வதேச அறிமுகத்திற்காக பாங்கொக் தெரிவுசெய்யப்பட்டமை, தாய்லாந்து மற்றும் இலங்கையின் இரத்தினக் கல் மற்றும் ஆபரணத் துறைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கை வர்த்தகர்களை சர்வதேச கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளர்களுடன் இணைக்கும் முக்கிய தளமாகவும் இந்நிகழ்வை மாற்றியது.


Ceylon Gem & Jewellery Traders Association மற்றும் இலங்கையின் இரத்தினக் கல் துறையைப் பொறுத்தவரையில், பாங்கொக் சர்வதேச அறிமுக விழா ஒரு வரலாற்றுச் சாதனையாகும். முதன்முறையாக GEM SRI LANKA இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்று, இலங்கையின் இரத்தினக் கற்களின் பிரகாசம், பாரம்பரியம் மற்றும் உலகளாவிய நற்பெயரை சர்வதேச அரங்கில் பெருமையுடன் வெளிப்படுத்தியுள்ளது.


அடுத்த அத்தியாயம் கொழும்பில் தொடரவுள்ளது. GEM SRI LANKA 2027, 2027 ஜனவரி 7 முதல் 9ஆம் திகதி வரை Shangri-La Colomb ல் நடைபெறவுள்ளதுடன், இலங்கையின் சிறந்த இரத்தினக் கற்கள், முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகர்கள், கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கவுள்ளது.


“இரத்தினத் தீவான இலங்கையிலிருந்து உலகிற்கு” — GEM SRI LANKA 2027, இலங்கையின் இரத்தினக் கல் பாரம்பரியம், தொழில்துறை சிறப்பு மற்றும் வளர்ந்து வரும் சர்வதேச இலட்சியத்தின் பெருமைமிகு அடையாளமாக உலக அரங்கில் பிரகாசிக்கிறது.

பேருவளை பீ.எம். முக்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *