தேசியப் பட்டியல் விவகாரம்: உண்மைக்குப் புறம்பான புரளிகள்
வதந்திகளையிட்டு அலட்டிக் கொள்ளப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அறிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில், ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் பற்றி ஆராயப்பட்டதாகவும், அதுபற்றி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு, விஷமத்தனமான வதந்திகள் பொறுப்பற்ற விதத்தில் சில சமூக வலைத்தளங்களாலும், தனிப்பட்ட நபர்களாலும், பரப்பப்பட்டும், பகிரப்பட்டும் வருவதையிட்டு விசனம் தெரிவித்த கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவற்றிற்காக அலட்டிக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரஸ்தாப
உயர்பீடக் கூட்டத்தில் சமகால அரசியல் கள நிலைவரம், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26 ஆவது நினைவு தின நிகழ்வு, பேராளர் மாநாடு என்பன பற்றியே கலந்துரையாடப்பட்டதாகவும், கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பற்றி அதில் பேசப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் சுயநல நோக்கோடு, அவ்வாறு சில சமூக வலைத்தளங்களாலும் ,தனி மனிதர்களாலும் புனையப்பட்டு, பகிரப்படும் புரளிகளையும், வதந்திகளையும் அறவே நம்ப வேண்டாம் எனவும், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் சரியான முடிவு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.
(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)
