உள்நாடு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் விசேட ஊடக சந்திப்பு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட மையவாடி மண் நிரப்பும் பணிக்கு நிதி மற்றும் பொருள் ரீதியாக உதவிய பொதுமக்கள், நன்கொடையாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகங்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் நலன் விரும்பிகள் மற்றும் அயல் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், குறித்த பணிக்காக பெறப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் வகையிலும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் காரியாலயத்தில் 2026.08.15 ஆம் திகதி இடம்பெற்றது..

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை பல தசாப்தங்களாக இன, மத பேதமின்றி மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வதற்குத் தேவையான பணிகளை முன்னெடுத்து வருவதாக, பேரவையின் ஸூரா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ரஃபி (ஹிழ்ரி) தெரிவித்துள்ளார்.

மரணமடைந்தவர்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வது மிகவும் பொறுப்புமிக்கதும் மனிதாபிமானமிக்கதுமான பணியாகும் எனத் தெரிவித்த அவர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் ஜனாஸா நலன்புரி பேரவையின் களப்பணியாளர்களின் சேவை பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட மையவாடி மண் நிரப்பும் பணிக்கு நிதி மற்றும் பொருள் ரீதியாக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், குறித்த பணிக்காக பெறப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் வகையிலும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு 2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் காரியாலயத்தில் நடைபெற்றது.

பேரவையின் மஜ்லிசு ஷூரா தலைவர் அல் ஹாபிழ் மௌலவி எம்.ஐ. ரவூபி ஹஸ்ரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸூரா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ரஃபி (ஹிழ்ரி), பேரவைத் தலைவர் எஸ்.எம். நஸீர், செயலாளர் யூ.கே. காலித்தீன், பொருளாளர் ஏ.எச். முர்சித், உப தலைவர் எம்.என். ஜெமீன், பிரதித் தலைவர் எல்.எம். நியாஸ் ஹாஜியார், மஜ்லிசு ஷூரா உறுப்பினர் எஸ்.எச். நஸீர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் சமூக முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இன, மத பேதமின்றி தொடரும் ஜனாஸா சேவை
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அஷ்ஷெய்க் எம்.ஐ. ரஃபி (ஹிழ்ரி), சமூக, சமய மற்றும் மக்கள் நலப் பணிகள் பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மரணமடைந்தவர்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வது தனித்துவமான பொறுப்பையும் மனிதாபிமானத்தையும் கொண்ட பணியாகும் எனத் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மரணமடைந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்காக மாளிகைக்காடு மையவாடி, சாய்ந்தமருது தக்வா பள்ளிவாசல் மையவாடி மற்றும் அக்பர் பள்ளிவாசல் மையவாடி உள்ளிட்ட மையவாடிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பின் செயற்பாடுகளை முறையாகவும் பொறுப்புடனும் முன்னெடுப்பதற்காக ஸூரா சபை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், அதிபர்கள், உலமாக்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மையவாடி இடப்பற்றாக்குறையை சமாளிக்க மண் நிரப்பும் பணி
2026 ஏப்ரல் 18ஆம் திகதி தக்வா பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், மையவாடியின் ஒரு பகுதியை அவசரமாக மண் நிரப்பி பயன்படுத்தக்கூடிய வகையில் தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அஷ்ஷெய்க் ரஃபி (ஹிழ்ரி) தெரிவித்தார்.

இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து மிகக் குறுகிய காலத்திலேயே பொதுமக்கள், நலன் விரும்பிகள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் சமூக உறுப்பினர்கள் பெரும் ஆதரவை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

“நாம் தேவையை சமூகத்தின் முன் வைத்தவுடன், ஒரு மாதம் நிறைவடைவதற்குள் தேவையான நிதி கிடைக்கப்பெற்றது. பெயர் குறிப்பிட விரும்பியவர்களும், பெயர் குறிப்பிட விரும்பாதவர்களும் தங்களால் இயன்ற அளவு நிதியுதவிகளை வழங்கினர்” என அவர் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டில் சுமார் 170 ஜனாஸாக்கள்
2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் சுமார் 170 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக ஏற்பட்ட இடப்பற்றாக்குறையை கருத்திற்கொண்டு மையவாடியின் ஒரு பகுதியை மண் நிரப்பி விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும், இதற்காகவே பொதுமக்களிடம் நிதியுதவி கோரப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

மாளிகைக்காடு உள்ளிட்ட அயல் பிரதேசங்களுக்கும் சேவை
மாளிகைக்காடு உள்ளிட்ட அயல் பிரதேசங்களில் மையவாடிகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும், அப்பகுதிகளில் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அஷ்ஷெய்க் ரஃபி (ஹிழ்ரி) தெரிவித்தார்.

அதேபோன்று அக்பர் பள்ளிவாசல் மையவாடியிலும் மண் நிரப்பும் பணிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியபோது தற்போதைக்கு அவசரத் தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் அங்கு மண் நிரப்புதல் அல்லது வேறு ஏதேனும் அவசரத் தேவை ஏற்பட்டால், அதற்கும் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை முன்னின்று உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரவு பகலாக சேவையாற்றும் களப்பணியாளர்கள்
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப்பணியாளர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி இரவு பகலாக சேவையாற்றி வருவதாகவும், உள்ளூர் மட்டுமன்றி வெளிப்பிரதேசங்களில் இருந்து வரும் ஜனாஸாக்களையும், பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களின் ஜனாஸாக்களையும் தேவைக்கேற்ப கொண்டு சென்று கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அஷ்ஷெய்க் ரஃபி (ஹிழ்ரி) தெரிவித்தார்.

“இந்தப் பணியில் ஈடுபடும் எமது களப்பணியாளர்களுக்காக சமூகத்தினர் எப்போதும் நன்றியுடன் பிரார்த்திக்க வேண்டும். மறுமையில் நன்மை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர்கள் தங்களது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.

டித்வா புயல் உள்ளிட்ட அனர்த்தங்களிலும் சேவை
இதனிடையே, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின்போதும், குறிப்பாக டித்வா புயலினால் மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் தேவைகளை உணர்ந்து தன்னார்வ அடிப்படையில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளதாக பேரவைத் தலைவர் எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

மரணமடைந்தவர்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது பேரவையின் பிரதான பொறுப்புகளில் ஒன்றாக இருப்பதாகவும், ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் மையவாடிகளை மண் நிரப்பி விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில், 2026 ஏப்ரல் 18ஆம் திகதி சாய்ந்தமருது தக்வா பள்ளிவாசல் மையவாடியில் முதற்கட்டமாக மண் நிரப்பும் பணியை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும், பின்னர் அக்பர் பள்ளிவாசல் மையவாடி உள்ளிட்ட தேவையான பகுதிகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரூ.20.24 இலட்சம் நிதி – ரூ.15.56 இலட்சம் செலவு
மண் நிரப்பும் பணிக்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த நிதி ரூ.20,24,580 எனத் தெரிவித்த பேரவைத் தலைவர் எஸ்.எம். நஸீர், அதில் ரூ.15,56,640 மண் நிரப்பும் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீதமாக ரூ.4,67,940 தொகை தற்போது பேரவையின் வசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மீதித் தொகை வேறு எந்த சமூக அல்லது நிர்வாகத் தேவைக்கும் பயன்படுத்தப்படாது என்றும், எதிர்காலத்தில் மண் நிரப்பும் பணிக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் தனியாகப் பேணப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

நன்கொடையாளர்கள் வழங்கிய தொகைகள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்பட்ட அமாநிதிகளாகக் கருதப்படுவதால், அவற்றை உரிய நோக்கத்திற்கே பயன்படுத்துவது தொடர்பில் பேரவை மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மண் நிரப்பும் பணிக்காக வழங்கப்பட்ட நிதியிலிருந்து பேரவையின் களப்பணியாளர்களின் தனிப்பட்ட உணவு, குடிநீர் அல்லது வேறு தனிப்பட்ட செலவுகளுக்கு எந்தத் தொகையும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அயல் பிரதேச மக்களின் பங்களிப்புக்கு நன்றி
பொதுமக்களிடம் தேவையை முன்வைத்ததைத் தொடர்ந்து சாய்ந்தமருது மக்கள் மட்டுமன்றி கல்முனைக்குடி, மாளிகைக்காடு, பாலமுனை, நிந்தவூர் உள்ளிட்ட அயல் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் பெரும் ஒத்துழைப்பை வழங்கியதாக எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

குறிப்பாக ஜாமியுல் இஸ்லா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகமும் அதன் மஹல்லா மக்களும் தாமாக முன்வந்து பேரவையை அழைத்து சுமார் ரூ.3.35 இலட்சம் பெறுமதியான உதவியை வழங்கியதாகவும், பிரதான வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் மஹல்லா மக்களும் சுமார் ரூ.60,000 நிதியுதவியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்கொடையாளர்களுக்கு நன்றியும் கணக்கறிக்கை வெளிப்படுத்தலும்
மையவாடி மண் நிரப்பும் பணிக்கு நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் ஸூரா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரஃபி (ஹிழ்ரி) நன்றி தெரிவித்தார்.

குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் சாய்ந்தமருதைச் சேர்ந்த சகோதரர்கள் உள்ளிட்ட பலர் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய அவர், ABM அஸ்வர் உள்ளிட்ட நன்கொடையாளர்களுக்கும் சமூகத்தின் சார்பில் விசேட நன்றியைத் தெரிவித்தார்.

“நீங்கள் வழங்கிய ஒவ்வொரு நன்கொடையும் அமாநிதமாகக் கருதி தேவைக்கேற்ப மிகுந்த பொறுப்புடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைவருக்கும் ‘ஜஸாக்குமுல்லாஹு கைரன் ஃபித்தாரைன்’ என நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

மையவாடி மண் நிரப்பும் பணிக்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை சமூகத்தின் முன் வெளிப்படையாகத் தெரிவிப்பதே இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நிதியின் வரவு–செலவு தொடர்பான கணக்கறிக்கையை பேரவைத் தலைவர் எஸ்.எம். நஸீர் முறையாக சமர்ப்பித்ததாகவும், சமூகத்தின் நம்பிக்கையைப் பேணும் வகையில் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் செயற்படும் என்றும் அஷ்ஷெய்க் ரஃபி (ஹிழ்ரி) தெரிவித்தார்.

மனிதாபிமானப் பொறுப்பு
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான பணிகளில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இன, மத பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் பேரவைத் தலைவர் எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

அயல் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் சகோதரர்களின் நல்லடக்கப் பணிகளிலும் பேரவையின் களப்பணியாளர்கள் பங்கேற்று தேவையான உதவிகளை வழங்கியுள்ளதாகவும், கொக்கடிச்சோலை உள்ளிட்ட பிரதேசங்களிலும் தேவைக்கேற்ப ஜனாஸா தொடர்பான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஜனாஸா சேவை என்பது ஒரு சமூகத்தின் மட்டும் பொறுப்பல்ல; அது மனிதாபிமானப் பொறுப்பாகும். எமது சமூக மக்கள் மட்டுமன்றி அயல் பிரதேச சகோதரர்களும் இந்தப் பணிக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. அவர்களுடைய ஒவ்வொரு உதவிக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

மையவாடிகளின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளை கருத்திற்கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் பணிகளை முன்னெடுக்க பேரவை உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியில், மையவாடி மண் நிரப்பும் பணிக்கு நிதி, பொருள், உழைப்பு மற்றும் ஆலோசனை ரீதியாக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பேரவைத் தலைவர் எஸ்.எம். நஸீர், அல்லாஹ் அவர்களது நன்கொடைகளையும் சேவைகளையும் ஏற்றுக்கொண்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை வழங்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தார்.

“ஜஸாக்குமுல்லாஹு கைரன் ஃபித்தாரைன்” என அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *