முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகள்தொடராக புறக்கணிப்பு, முஸ்லிம்கள் வேதனை; பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீது நம்பிக்கை வைத்து முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய போதும் முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பாக முஸ்லிம் சமூகம் பெரும் வேதனையடைந்துள்ளது என்று திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எல்நினோ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எல்நினோ தாக்கம் காரணமாக நாட்டில் பல்வேறு துறைகளும் பாதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது. அவற்றில் உணவு உற்பத்தி விவசாயத்துறை பிரதான இடத்தைப் பெற்று விளங்குகிறது. அதனால் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் எல்நினோவின் விளைவாக தாக்கங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் தயார்படுத்தல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியம்.
அதேநேரம் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீது நம்பிக்கை வைத்து கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மையான வாக்குகளை வழங்கினர். அப்படியிருந்தும் முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து முஸ்லிம் சமூகம் பெரிதும் வேதனை அடைந்துள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் தற்போதைய அரசாங்கத்தில் தான் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட நியமனம் செய்யப்படவில்லை. தற்போது ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வகிக்கும் தகுதி இல்லை எனவும் கூறுகின்றனர்.
ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா குழுவிலும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி இல்லை, பிரதமரால் அமைக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்புக் குழுவிலும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி இல்லாத நிலையில் இயங்கி வருகின்றது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொரோனா தொற்றால் மரணித்து எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர் விபரங்களைக் கூட அநுர அரசாங்கத்தால் வழங்க முடியாமல் உள்ளது.
அண்மையில் நியமனம் செய்யப்பட்ட தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி இல்லை. இந்த ஆணைக்குழுவில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த போது தேசிய எல்லை நிர்ணயக் குழு அரச துறை சார்ந்தவர்கள், உயர் தகைமை மற்றும் தொழில்நுட்ப தகைமைகளை கருத்திற் கொண்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் பாராளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்தமை குறித்து நான் அதிர்ச்சி அடைகிறேன். கடந்த காலங்களில் இவ்வாறான ஆணைக்குழுக்களில் மூவின மக்களின் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் ஆரம்பத்தில் இருந்து பேராசிரியர் ஹஸ்புல்லா, ஏ.எம். நஹீயா (பணிப்பாளர் நாயகம் – இலங்கை புணர்வாழ்வு அதிகாரசபை), அமீர் (ஏற்றுமதி விவசாய அமைச்சின் செயலாளர்) ஆகிய முஸ்லிம் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டனர் என்ற வரலாற்றை நான் இப்பாராளுமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த முறை நடைபெற்ற தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு நேர்முகப் பரீட்சையில் 2 முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் முஹம்மட் (முன்னாள் தேர்தல் திணைக்களத்தின் ஆணையாளர்) மற்றையவர் அமீர் (ஏற்றுமதி விவசாய அமைச்சின் செயலாளர்) முஸ்லிம் சமூகத்தில் தகுதியான பல பேர் இருந்தும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தேசிய எல்லை நிர்ணயக் குழுவில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை நியமனம் செய்யாமல் விட்டது அரசாங்கத்தின் தவறாகும். பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல சமூகங்களின் பிரதிநிதிகளையும் நியமனம் செய்யும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.
பிரதமரின் பதிலில் துறைசார் நிபுணத்துவம், உயர் தகைமை, தொழில்நுட்ப தகைமை உடையவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இல்லை என்ற நிலைப்பாடு போன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன ஒற்றுமை எல்லா இனங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டிய அரசாங்கம் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி இல்லாமலும் சமத்துவம் இல்லாமல் எல்லா குழுக்களையும் நியமனம் செய்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என எல்லோரும் இனங்களுக்கிடையில் உறவுகளை வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படும் முக்கியமான குழுக்களிலும், அமைச்சரவையிலும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பாக அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் சக்தி யார்? அந்த சக்தியை கண்டுபிடித்து சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அக்கரைப்பற்றில் பகிரங்கமாக மக்கள் மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நுரைச்சோலை வீட்டுத்திட்ட வீடுகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவித்தார். ஜனாதிபதி அதிகாரம், பாராளுமன்ற அதிகாரம், அமைச்சரவை அதிகாரம் (159 பெரும்பான்மைப் பலம்) என முழுப் பலமான சக்தியாக இந்த அரசாங்கம் இருக்கின்ற போதிலும் ஜனாதிபதி அவர்களினால் வாக்குறுதியளிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகள் பகிர்ந்தளிப்பது தொடர்பான எந்தவிதமான செயற்பாடுகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. எனவே, இந்த நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
எனக்கு முன்பு பேசிய ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த அரசாங்க காலத்தில் பொது மக்களின் வரிப்பணத்தில் வாகன பேர்மிட் எடுத்து அதனை 03 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாகக் கூறினார். அவர் கூறிய விடயம் உண்மையானதாகும். இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, இப்போதைய பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய மற்றும் இன்றைய மிக முக்கிய அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, விஜித ஹேரத் உட்பட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் வாகன பேர்மிட்டை பெற்றுள்ளனர் என்பதனை மறந்து இந்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

