நேபாளத்திற்கு உதவ இலங்கை தயார்; ஜனாதிபதி அநுர
உயிரிழப்புகளை ஏற்படுத்திய பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவசரநிலை மற்றும் அதன் பின்விளைவுகளுக்கு நேபாள அதிகாரிகள் பதிலளித்து வரும் நிலையில், அந்நாட்டுக்கு ஆதரவளிக்க இலங்கை தயாராக இருப்பதாக தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பத்து மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கொடிய புயலினால் இலங்கையும் பாதிக்கப்பட்டு, அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீண்டு வரும் நிலையில், நேபாள மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்குகொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை சார்பில் நேபாள தலைமைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
