உள்நாடு

பிரதமரின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த இறைபக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் “மீலாதுன் நபி” நாளுக்காக வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள கிடைத்தமை நான் பெற்ற பாக்கியமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

நபிகள் நாயகம் அவர்கள் அகில உலகிற்கும் போதித்தது அமைதி, சமத்துவம், கருணை மற்றும் பரஸ்பர மரியாதையின் உன்னத செய்தியையேயாகும். தற்போதைய உலகளாவிய சமூகம் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் மானுடவியல் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்றது, குறிப்பாகக் கொடூர யுத்த மோதல்கள் காரணமாக நிரபராதிகளான மனித உயிர்கள் பலியாகும் துன்புறுத்தலுக்குள்ளாகும் பின்னணியில், நபிகள் நாயகம் அவர்களின் அந்தத் தொலைநோக்குத் தத்துவமானது எக்காலத்தையும் விட இன்று மிகவும் பொருந்துகின்றது என்பதே எனது புரிதலாகும். 

குறிப்பாக, நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து தற்போதைய சமூகத்திற்கும் நமது நாட்டிற்கும் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த முன்மாதிரிகளாக, நீதி நியாயம், மதச்சகிப்புத்தன்மை மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

பல்வேறு இனங்களையும் மதங்களையும் சார்ந்தவர்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில், நாம் ஒருவரையொருவர் புரிந்து உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து எழுச்சி பெறுவதற்கு நபிகள் நாயகம் அவர்களின் முன்மாதிரிகளை நடைமுறையில் நமது வாழ்க்கைக்குள் உள்வாங்கிக்கொள்ளுதல் வேண்டும். 

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், இந்த உலகமானது உலகளாவிய போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு, அமைதியானதொரு உலகமாக மாற்றம் பெற வேண்டுமென மனமாரப் பிரார்த்திக்கின்றேன். 

அத்தோடு, உலகம் முழுவதிலும் போரின் கொடூரத்தினாலும் துன்புறுத்தல்களினாலும் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து வேதனையடையும் அனைத்து மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரினதும் ஒரே பிரார்த்தனையாக இருக்க வேண்டும் என்பதே எனது அவாவாகும். 

இம்முறை கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, நீர்கொழும்பு பெரியமுல்லை அல் ஹிலால் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெறும் தேசியக் கொண்டாட்டமானது, நமது நாட்டினுள் பன்முகத்தன்மையின் அழகைப் போற்றிப் பாராட்டி மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் பலப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என நான் நம்புகிறேன். 

இந்த தேசிய விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பாடுபடும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட அமைப்புக் குழுவினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மனிதநேயமிக்க, இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அமைதியும், சௌபாக்கியமும், சகோதரத்துவமும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துகள் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *