வரகாபொல – அம்பேபுஸ்ஸ புறவழிச் சாலை (Bypass Road) அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்து வைப்பு
தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வரகாபொல – அம்பேபுஸ்ஸ புறவழிச் சாலை (Bypass Road) அபிவிருத்தித் திட்டத்தின் கட்டுமானப் பணிகள், மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் மற்றும் வரகாபொலை பெரிய ஜும்ஆ பள்ளி பேஸ் இமாம் அஷ் ஷேஹ் அல் ஹாபிழ் பயாஸ் கவுஸ் அவர்களின் கிராஅத்துடன், ஆரம்ப நிகழ்வு நேற்று (24) வரக்கபொல அங்குருவெல்ல சந்திப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வரகாபொல – அம்பேபுஸ்ஸ புறவழிச் சாலையில் கி.மீ. 0.000 முதல் கி.மீ. 2+320 வரையிலான கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ரூ. 4988 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து, மெஸ்ஸர்ஸ் மாகா இன்ஜினியரிங் (பிரைவேட்) லிமிடெட் (Maga Engineering PVT Ltd) நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இத்திட்டம் இரண்டு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மனோஜ் ராஜபக்ஷ, காஞ்சன வெலிபிட்டிய, கலாநிதி நந்தன மில்லகல, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுட, வரகாபொல பிரதேச சபையின் தலைவர் சந்தன எதிரிசிங்க, வரகாபொல பிரதேச சபை உறுப்பினர் றிஸ்மின் அமீர், பிரதேச சபையின் உறுப்பினர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர். ருவன்வெல்ல பிரதேச சபை தலைவர், கலிகமுவ பிரதேச சபை தலைவர், கேகாலை மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த, வரகாபொல பிரதேச செயலாளர் ரங்கன சஜீவ மற்றும் அரச அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அபேதீர, பிரதி பணிப்பாளர் நாயகம் அறம்பொல, சப்ரகமுவ மாகாண வீதிகள் பணிப்பாளர் ஜனக ரணசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகள், மாகா இன்ஜினியரிங் பிரதம நிறைவேற்று அதிகாரி பியதாச மாரசிங்க உட்பட அதிகாரிகள், வரகாபொல வர்த்தக சமூகத்தினர் உட்பட நகர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாற்றுச் சாலையின் கட்டுமானம், கேகாலை மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, கேகாலை நகரம் வழியாகச் செல்பவர்களுக்கும் கண்டி மாவட்டத்திற்குள் நுழைபவர்களுக்கும் வசதியை வழங்கும். மேலும், குருநாகல் மாவட்டம் மற்றும் வடமத்திய மாகாணத்திற்குள் நுழையும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைவதாலும், நேரம் சேமிப்பாலும் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பயனடையும்.






