உள்நாடு

பல்லினச் சமூகமொன்றில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக முஹம்மது நபி நாயகத்தின் வழிகாட்டல் ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பல்லினச் சமூகமொன்றில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக முஹம்மது நபி நாயகத்தின் வழிகாட்டல் ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மீலாத் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியிலே மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகம் முழுவதும் வசிக்கும் முஸ்லிம் மக்கள் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த புனித நபி தினத்தில், அனைத்து இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் எனது உளமார்ந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முஹம்மது நபி நாயகத்தின் வாழ்வியலையும் போதனைகளையும் நோக்கும்போது, ​​சமூக அமைதி, நீதி மற்றும் பன்முகத்தன்மை மீதான அவரது மரியாதை என்பவையே பிரதானமாகத் தெளிவாகின்றன. பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களைக் கொண்ட மதீனாவின் பல்லினச் சமூகத்திற்குள் எவ்வாறு சமாதானமாக வாழ்வது என்பதை அவர் தமது செயல்கள் ஊடாக உலகிற்கு வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, “மதீனா சாசனம்” ஊடாக பல்வேறு கோத்திரங்களுக்கும் மதக் குழுக்களுக்கும் இடையே சமாதானத்தையும், இணக்கப்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அவர் நடவடிக்கை எடுத்தார். சமாதானம் என்பது வெறுமனே மோதல்கள், நெருக்கடிகள், அச்சம், சந்தேகம் அற்ற நிலை மாத்திரமன்றி, ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதும் நீதியை நிலைநாட்டுவதுமாகும் என்பதை அவர் போதித்தார்.

எமது தாய்நாடான இலங்கையும் ஒரு பல்லின, பன்மத மற்றும் பன்முகக் கலாசாரங்களைக் கொண்ட அழகிய நாடாகும். இத்தகைய சமூகத்தில் பரஸ்பர புரிதல், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பது நிலைபேறான அபிவிருத்திக்கும் அமைதிக்கும் இன்றியமையாததாகும். நபி நாயகம் காட்டிய அந்த உன்னதமான நடுத்தர நல்வழிப்பாதை மற்றும் நல்லிணக்கப் பாதையைப் பின்பற்றி, இன மத பேதங்கள் பாராமல் ஒருவருக்கொருவர் மதிக்கின்ற, நீதியான இலங்கையைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

நபிகளார் காட்டித் தந்த நற்போதனைகளை நாளாந்தம் பின்பற்றி, அப்லலுல் ஹைர்கள் எனும் நாட்டிற்கும், சமூகத்திற்கும், மனிதர்களுக்கும் செய்யும் நன்மைகள் மற்றும் உபகாரங்கள் போலவே, இறைவனிடம் நெருக்கத்தைத் தேடித்தரும் மிகச் சிறந்த வழிபாடுகளையும் செய்வதற்கு இந்நாளில் தூய எண்ணத்தை மனதில் கொள்வோம்.

இந்த மீலாதுன் நபி தினம், நமது நாட்டில் பரஸ்பர மரியாதை, சமாதானம் நிலவும் புதியதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கட்டும் எனப் பிராத்திக்கின்றேன்! என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *