கலாசார ஆடை அணியும் உரிமை சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்; அம்பாறை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் வேலை பார்ப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற அரசாங்கம் முன்வர வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இழைக்கப்பட்ட அநீதி குறித்து அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் மௌலவி, செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி மௌலவிஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
தலைமுடியை மூடும் வகையிலான ஹிஜாப் அணிந்த காரணத்தால்
முஸ்லிம் சுகாதார உதவியாளர்களை கடமை செய்ய விடாது இடையூறு விளைவித்தமை, அவர்களுக்கு இடமாற்றம் கொடுத்தமை, ஆர்ப்பாட்டம் செய்து மன உளைச்சலை ஏற்படுத்திய போன்ற செயற்பாடுகள் மனிதாபிமானத்துக்கும் மனித நாகரிகத்துக்கும் உட்பட்ட செயலாக பார்க்க முடியாது.
உண்மையில், புதிதாக நியமனம் பெற்று வருபவர்களை வாழ்த்தி வரவேற்பதே மானுட தர்மமாகும். அதை விடுத்து சீருடைக்கு மேலதிகமாக, சமய நெறிமுறைகளைத் தழுவிய ஒழுக்கமானதும் கௌரவமானதுமான ஆடையை அணிந்ததற்காக ஆவமானப்படுத்தி இடமாற்றம் செய்தமை சகவாழ்வுக்கு இடையூறு விளைவிக்கின்ற வன்மத்தை வெளிப்படுத்தும் செயற்பாடாகும்.
ஒவ்வொருவரும் தத்தமது சமய, கலாசார தனித்துவங்களை பிரதிபலிக்கும் விதமாகவே தொழில் செய்யும் இடங்களிலும் வெளியிலும் வாழ்கின்றனர். அது அவர்களது உணர்வும் உரிமையுமாகும். இவ்விடயத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் வைத்துப் பார்ப்பது அவர்களது அடிப்படை உரிமையை மீறும் செயல் மட்டுமல்பாமல் இன விரிசலை ஏற்படுத்த தூபமிடும் வன்முறை நடவடிக்கையுமாகும்.
முஸ்லிம் பெண்களின் ஆடை உரிமைக்காக குரல் கொடுத்த முஸ்லிம் , தமிழ், சிங்கள பாரளுமன்ற உறுப்பினர்களை நாம் பெரிதும் மதிப்பதுடன் இது விடயத்தில் கரிசனை காட்டிய சட்டத்தரணிகள். கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளை பாராட்டுகிறோம். சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் முஸ்லிம் பெண்களின் ஆடை உரிமைக்காக முன்னொரு போதும் இல்லாத அளவு அதிகமான தமிழ் சகோதர, சகோதரிகள் குரல் கொடுத்திருந்தார்கள். நீதி, நியாயத்துக்காக சமயம், இனம் தாண்டிய மகத்தான இப்பணிதான் இன்று அவசியப்படுகிறது – என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மேலும் குறிப்பிட்டுள்ளது.
(அஸ்லம் எஸ்.மௌலானா)
