Saturday, August 22, 2026
Latest:
உள்நாடு

பிரதமரின் பங்கேற்புடன் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கௌரவிப்பு

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் இன்று (22) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 2.00மணிக்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான (டாக்டர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ராஜீவன் மற்றும் சுகத் வசந்த டி சில்வா ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்வின் வரவேற்புரையை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நிகழ்த்தினார். இதன் போது, இந் நிகழ்விற்கு வருகை தந்துள்ள பிரதமர், கடற்றொழில் அமைச்சர், ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் அன்புடன் வரவேற்றதுடன்,
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சனாதிபதி நிதியத்தினால் இத்தகைய சிறப்பான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதும், அதன் இரண்டாவது நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுவதும் இந் நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்களாகும். குறிப்பாக, நாட்டின் பிரதமர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது மேலும் சிறப்புக்குரிய விடயமாகும்.
உண்மையில், பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இவ்வுதவித் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
எமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், சனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களின் கல்வி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

மேலும், இத் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளரும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமானஜி.ஜி.எஸ்.சி. ரோஷன்க கமகே விளக்கமளித்தார்.

தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவருமான சுகத் வசந்த டி சில்வா, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோர் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் விசேட உரையாற்றினார்.

நிகழ்வில் பிரதமர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று, ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் நலன்களை விசாரித்ததுடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிதியுதவிகளையும் வழங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 68 பேரும், வவுனியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 பேரும், பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 76 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் மாணவி ஒருவரால் நன்றியுரை ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன், வடமாகாண கல்வி, கலாச்சார விவகாரங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி, வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ.அட்புதராஜா, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச்.பி. சிறிவர்தன, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ்.கபிலன், ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள், வடக்கு மாகாண மாவட்டங்களின் மேலதிக அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *