உலகம்

நான்கு முதல்வர்களுடன் திரையுலகில் பயணித்தவர் நடிகை செளகார் ஜானகி அம்மையார் – அவரது மறைவிற்கு முதல்வர் விஜய் ஜோசப், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (வயது 94) வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அளவில் அவரது உயிர் பிரிந்தது. நடிகை சௌகார் ஜானகியின் கணவர் பெயர் சங்கரமஞ்சி ஸ்ரீனிவாசராவ். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு யக்ஞ பிரபா கோட்டி, சாச்சி ராவ் என்ற இரு மகள்களும், வெங்கடரமண சங்கரமஞ்சி என்ற 1 மகனும் உள்ளனர்.

உடல்நலக்குறைவால் மரணம்
சௌகார் ஜானகிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சௌகார் ஜானகி உடல்நிலை வெள்ளிக்கிழமை காலை மிகவும் மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு மரணம் அடைந்தார். சௌகார் ஜானகியின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக..
சௌகார் ஜானகியின் உடல் சனிக்கிழமை இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து
இறுதிச் சடங்கு சனிக்கிழமை மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலகத்தில் பல்வேறு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் (1931) பிறந்தவர். தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் படித்தார். குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வானொலி நாடகங்களிலும் பங்கேற்றார். வானொலி நாடகத்தைக் கேட்ட சினிமா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தார். பெற்றோருக்கு இதில் விருப்பம் இல்லாததால், உறவுக்காரப் பையனுக்கு இவரை மணமுடித்து வைத்தனர்.

கணவருடன் விஜயவாடாவில் வசித்தார். அவர் வேறு நல்ல வேலை தேடி, சென்னைக்கு வந்தார். சினிமா ஆசை துளிர்த்ததால் இவரும் சென்னை வந்து, தயாரிப்பாளர் பி.என்.ரெட்டியை சந்தித்தார். தன் தம்பி நாகிரெட்டியிடம் அவர் சிபாரிசு செய்தார். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்கு படத்தில் 19ஆவது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். தோற்றமும், நடிப்பும் இயல்பாக இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இதனால் ‘செளகார் ஜானகி’ ஆனார்.

மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வளையாபதி’ படத்தில் பாரதிதாசன் எழுதிய வசனத்தைப் பேசி நடித்தார். தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் என முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. அற்புத நடிப்பாற்றல், அபாரமாக வசனம் பேசும் திறன் கொண்ட இவர், ‘பாக்கியலட்சுமி’, ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’ என பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன. சோகக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பே அதிகம் கிடைத்தாலும், காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்து பாவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசுவார். கே.பாலசந்தரின் நாடகங்களிலும் நடித்தவர். 300-க்கும் மேற்பட்டமுறை மேடையேறியவர். காவியத்தலைவி, ரங்கராட்டினம் ஆகிய 2 படங்களை தயாரித்தார். தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்தார். சமையல், தோட்டக் கலையில் வல்லவர்.

சென்னையில் 1965இல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன்குருவாக ஏற்றுக்கொண்டார். அவரால்தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது கலை சேவையை பாராட்டும் வகையில் 2022-க்கான பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி சில ஹிந்தி படங்களிலும் ஏறக்குறைய 400 படங்களில் நடித்துள்ளார். என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ராஜ்குமார், பிரேம் நசீர் என அன்றைய அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்த பெருமைமிக்கவர்.

1964இல் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘புதிய பறவை’ திரைப்படம் இவருடைய திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.

அதன்பின் 1969இல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘இரு கோடுகள்’ திரைப்படம் இவருடைய நடிப்பாற்றலுக்கு மேலும் மகுடம் சூட்டியது. ‛எதிர்நீச்சல், தில்லு முல்லு’ போன்ற திரைப்படங்களின் மூலம் தான் ஒரு நகைச்சுவை நடிகையாகவும் வெற்றி காண முடியும் என்பதை நிரூபித்திருப்பார்.

முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்
தமிழ் சினிமாவில் பல்வேறு பாத்திரங்களை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மு.கருணாநிதி கதை வசனத்தில் ‘குலக்கொழுந்து’ படத்தில் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழில் பாவேந்தர் பாரதிதாசன் வசனம் எழுதிய வளையாபதி படத்தில் அவரது வசனத்தை பேசி நடித்துள்ளார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் குமுதம் படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு . 73 வருடங்களாக திரையில் ஜொலித்த சௌகார் ஜானகி, 4 முதல்வர்களுடன் சினிமாவில் சம காலத்தில் பயணித்தவர். ஆந்திர முதல்வராக இருந்த என்.டி ராமராவ், தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் திரைத்துறையில் பயணித்துள்ளார்.

கதாநாயகியாக தான் நடிப்பேன் என்றில்லாமல் இரண்டாவது நாயகி, குணச்சித்ரம் ஏன் காமெடி வேடங்களில் கூட நடித்தவர். எந்த மொழிப் படங்களில் நடித்தாலும், அந்தந்த மொழிக்கான உச்சரிப்பை தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசிய பெருமைக்குரியவர். காவியத்தலைவி, ரங்கராட்டினம் ஆகிய 2 படங்களை தயாரித்தார். தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்தார்.
சமையல், தோட்டக் கலையில் வல்லவர்.சென்னையில் 1965இல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன்குருவாக ஏற்றுக்கொண்டார். அவரால்தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். திரையுலகில் தைரியமான யதார்த்த நடிகை என பெயரெடுத்தவர் திரையுலகில் சுமார் 70 ஆண்டுகாலம் நடித்த ஜானகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இது குறித்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் கூறியதாவது : “தனியார் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயர் அடைந்தேன்.

பத்ம ஸ்ரீ, கலைமாமணி, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள அவர், மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து வரலாறு படைத்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த பல கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தனக்கென தனி பாணியைக் கடைபிடித்து, 400-க்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு சகாப்தத்தையே உருவாக்கினார் என்றால் அது மிகை இல்லை.

தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்து குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை செய்துள்ளார். அவரது மகள், பேத்தி, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவனது திருவடியை அடைந்து விட்ட அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்பதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

சௌகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது : பழம்பெரும் நடிகை ‘பத்மஸ்ரீ’ திருமதி சௌகார் ஜானகி அம்மையார்
அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றபோதிலும், தமிழில் அறிமுகமான வளையாபதி திரைப்படத்திலயே பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வரிகளைச் சிறப்பாக உச்சரித்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்தை ஈர்த்தவர் திருமதி சௌகார் ஜானகி அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தி திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் இத்திரைப்படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

380-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவரது நீண்ட திரைப்பயணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா, என்.டி.ஆர். எனப் பல முதலமைச்சர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றிருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களின் மீது அளவுகடந்த மரியாதை கொண்டவராக இருந்து, எங்கள் குடும்பத்தினரோடும் நட்போடு பழகிய சிறந்த மனிதப் பண்பைக் கொண்டவராக சௌகார் ஜானகி அவர்கள் திகழ்ந்தார்.

புதிய பறவை, நீர்க்குமிழி, பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு என நீண்டுகொண்டே போகும் அவர் நடித்த வெற்றிப்படங்களின் மூலமாக தென்னிந்திய மக்களின் மனதில் அவர் என்றும் புகழோடு வாழ்வார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எம். முருகன், அமைச்சர் அருண்ராஜா காமராஜர் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம். பி., திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், நாசர், விஷால், சரத்குமார், எஸ். வி. சேகர், ஜூனியர் என்டிஆர், நடிகைகள் ராதிகா சரத்குமார், சிம்ரான், குஷ்பு, சாக்‌ஷி அகர்வால்
மற்றும் திரை நட்சத்திரங்கள், சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *