உள்நாடு

இணையவழி ரயில் பருவச் சீட்டுக்களை செப்டம்பர் முதல் தனியார் துறை ஊழியர்களும் பெறும் வசதி

தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணைய வழி ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவிதச் சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையம் ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகளுக்குப் பத்து நாட்களுக்கான விசேட பயிற்சி வழங்குவதற்கும், சாரதிகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக நடமாடும்போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கும், தரம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான வாகனங்களை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு SLS தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசங்களின் (Helmets) பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிளுக்கென்றே தனியான ஒழுங்கு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *