உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை உறுப்பினர்களுக்கும், இராணுவ உயரதிகாரிக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை உறுப்பினர்களுக்கும், இலங்கை இராணுவத்தின் 58ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் திலந்த ஜயவர்தன RSP, ndc (General Officer Commanding, 58 Infantry Division) அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை (20) புத்தளத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது புத்தளம் நகரின் தற்போதைய நிலைமை மற்றும் முக்கியமான சமூக விடயங்கள் தொடர்பாக சுமுகமான முறையில் கலந்துரையாடப்பட்டதுடன், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு, சமாதானம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழிபெயர்ப்புடன் கூடிய புனித அல்குர்ஆன் பிரதியொன்று, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்-மிஸ்பாஹி அவர்களால் மேஜர் ஜெனரல் திலந்த ஜயவர்தன அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் திலந்த ஜயவர்தன அவர்களை நேரில் சந்தித்து சிநேகபூர்வமான முறையில் கலந்துரையாடியமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அமைந்ததுடன், அவர் மிகவும் அன்புடனும் நட்புறவுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்க விடயம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்-மிஸ்பாஹி தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் நகரக் கிளையின் செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானி, உப செயலாளர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபி, மத நல்லிணக்கப் பொறுப்பாளர் அஷ்ஷேக் முஹ்ஸின் நத்வி மற்றும் கல்விப் பொறுப்பாளர் அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிங்கள மொழிபெயர்ப்புடன் கூடிய புனித அல்குர்ஆன் பிரதியை வழங்கிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

எம்.யூ.எம்.சனூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *