சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்வதை விடுத்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்பட அனைவரும் ஒன்றிணைவோம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நமது நாடு கடந்த 7 வருடங்களில் 5 பேரழிவுகளுக்கு முகங்கொடுத்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடக்கம் ஈரான் போர் வரையான பல நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் ஆபத்துகளுக்கு நாடு முகங்கொடுத்தது. இக்காலகட்டத்தில் நாட்டை தந்திரோபாய ரீதியாகவும் வியூக ரீதியாகவும் அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. நீதியான, ஒழுக்கமான, நாகரீமகான மற்றும் ஆன்மீக விழுமியங்களைப் பேணும் மக்கள் பரம்பரையொன்றை கட்டியெழுப்ப வேண்டும். வறியோர் மற்றும் வசதிபடைத்தோர் என்ற பேதமின்றி அனைவருக்கும் சுபீட்சத்தைக் கொண்டுவந்து எமது நாட்டைப் பாதுகாக்கும் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பத் தன் கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் மாற்றிச் செயற்படாது, சந்தர்ப்பவாதச் செயற்பாடுகளைத் தவிர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றாய் இணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சங்கைக்குரிய மகாகந்தே ஸ்ரீ ரதனபாலாபிதான மகாநாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ்திரப் பத்திரத்தை கையளிக்கும் நிகழ்வு எல்பிடிய, கஹதுவ, வதுருவில, திப்போட்டுவாவ வனவாச தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் உத்தம சட்டமான அரசியலமைப்பினுள் சம்புத்த சாசனத்திற்கு முன்னுரிமை வழங்கி அதனைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும்கூடப் பொறுப்புள்ளவர்களாக இருப்பதனால் அது அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமெனவும், அதுமட்டுமன்றி ஏனைய மதங்கள், கலாசாரங்கள் மற்றும் ஏனைய மக்கள் சமூகங்களின் அடையாளத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது நாடொன்றாக அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், இந்த நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் ஊடாக நிச்சயமாக ஒழுக்கமான, நீதியான, நாகரிகமான, முற்போக்கான, சிறந்த மக்கள் சமூகம் கட்டியெழுப்பப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
🟩 கடந்த காலத்தில் மகா சங்கத்தினருக்கும் சம்புத்த சாசனத்திற்கும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
அண்மைக் காலத்தில் பல்வேறு சக்திகள் சம்புத்த சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உருவாக்கி, பௌத்த மதத்தை திரிபுபடுத்த பல குழுக்கள் செயற்பட்டன. சம்புத்த சாசனத்தின் காவல்தெய்வங்களான மகா சங்கத்தினர்களை விமர்சனங்களுக்கும், அவமதிப்புகளுக்கும், நிந்தனைகளுக்கும், அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. சகல வாதப்பிரதிவாதங்களையும் தாண்டி எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த மகா சங்கத்தினரைப் பாதுகாப்பது தேசிய பொறுப்பாகக் கருத வேண்டும். இது குடிமக்களினது கடமையென்பதால் நாட்டின் பிரஜைகளாக அனைவரும் இதனை நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
🟩 நிந்தனை மற்றும் புகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடுநிலையான மனதுடன் அவற்றுக்கு முகங்கொடுப்போம்.
எத்தகைய நிந்தனை மற்றும் புகழ்ச்சிகள் கிடைத்தாலும் அவற்றுக்கு அடிபணியாது செயற்படும் மகா சங்கத்தினர் கெளரவத்திற்குப் பாத்திரமானவர்கள். புத்த பெருமான்கூட தம்மபதத்தில் போதித்தவாறு, நான்கு திசைகளிலிருந்தும் வீசும் மகா காற்றுக்கு அசையாமல், உறுதியாக இருக்கும் பெரும் கல்மலையானது அதனைத் தாங்கி நிற்பது போன்று மகா சங்கத்தினர் அவற்றுக்கு முகங்கொடுத்து மதக் செயற்பாடுகளில் ஈடுபடுவது நாட்டின் பாக்கியமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
🟩 அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்குச் செல்ல வேண்டும்.
எமது நாட்டில் 14,129 விகாரைகளும், 10,347 தஹம் அறநெறிப் பாடசாலைகளும், 327 சாசனராக்ஷக பல மண்டல அமைப்பும், 824 பிரிவெனாக்களும் காணப்படுகின்றன. எமது நாட்டில் உள்ள இந்தப் விகாரை கட்டமைப்பைப் பாதுகாக்கவும், இந்தப் விகாரைகள் ஊடாக நிறைவேற்றப்படும் மத மற்றும் சாசனச் சேவையை மேலும் வலுப்படுத்த அனைவரும் தலையிட வேண்டும். கொரோனா காலத்திற்குப் பின்னர் அறநெறிக் கல்வியில் வீழ்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது. இந்த அறநெறி பாடசாலை கட்டமைப்பை சிறுவர் பரம்பரைக்கும், இளைய பரம்பரைக்கும் தொடர்புபடுத்தும் வகையிலான வேலைத்திட்டத்துடன் இணைப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 நாம் இன்று நாடொன்றாகப் பல ஆபத்துகளுக்கு முகங்கொடுத்து வருகிறோம்.
விகாரை கட்டமைப்பையும், மகா சங்கத்தினரையும் பாதுகாப்பது போன்றே நாட்டை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். யார் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் எமது ஆள்புல ஒருமைப்பாடு, இறையாண்மை, சுயாதீன தன்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். இன்று ஆபத்தான யுகமொன்றில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். உலகளாவிய மற்றும் சர்வதேச ரீதியில் பேரிடர்களும் பேரழிவுகளும் நிகழ்ந்து வருகின்றன. மனிதனின் செயற்பாடுகள் காரணமாக உருவாக்கப்படும் பேரிடர்களுக்கும், பேரழிவுகளுக்கும் மேலதிகமாகச் சுற்றாடல் அமைப்பில் ஏற்படுகின்ற காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாகவும் பல சவால்கள் எம்முன் உருவாகி காணப்படுகின்றன. இவற்றுக்கு ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து முகம்கொடுக்க முன்வர வேண்டும். நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்பட அனைவரும் கைகோர்ப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.





