உள்நாடு

பிரபல போதை கடத்தல்காரர் ஷிரான் பாஸிக் மேலதிக விசாரணைக்காக சி.ஐ.டியில்

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஷிரான் பாசிக் உள்ளிட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறுகிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷிரான் பாசிக் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஈரான் – அமெரிக்க மோதலின்போது, ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவரது கையடக்கத் தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் டுபாயில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தப்பிச் சென்ற தெஹிவளை, களுபோவிலையைச் சேர்ந்த ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரும், அபுதாபியிலிருந்து புறப்பட்ட எயார் அரேபியா விமானம் மூலம் நேற்று இரவு 8.48 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *