கம்பஹா மாவட்டம் மற்றும் நீர்கொழும்பில் நிகழ்வுகள் நிறைந்த மீலாது விழா
42வது தேசிய மீலாத் விழா பிரதான நிகழ்வுக்கான இறுதிக் கூட்டம் இன்று 14.08.2026 அல் ஹிலால் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதான நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடலுக்கு வருகை தந்தவர்கள் பிரதி அமைச்சர்களான முனீர் முலப்பர், மஹிந்த ஜயசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலகரத்ன, முஸ்லிம் கலாசார அபிவிருத்தி பணிப்பாளர், நீர்கொழும்பு மாநகர சபை மேயர் மற்றும் பிரதி மேயர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி வலயப் பணிப்பாளர், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர் அதிகாரி, பொலிஸ், STF, விமானப்படை, இராணுவம் மற்றும் தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ள 10 பிரதான அன்பளிப்பு அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், “கம்பஹா மாவட்டத்தின் முஸ்லிம் வரலாறு” என்ற நூலை வெளியிடுவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நூல் தமிழில் 500 பிரதிகளும், சிங்களத்தில் 300 பிரதிகளும் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், சிறப்பு தபால் முத்திரை வெளியீடும் இடம்பெறவுள்ளது.
பிரதான நிகழ்வு பிற்பகல் எதிர்வரும் 26 ஆம் திகதி 3.00 மணிக்கு ஆரம்பமாகி, ஜனாதிபதி மாலை 7.00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதி விசேட மற்றும் விசேட விருந்தினர்களுக்கான ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 21 முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் 6 பாடசாலைகள் மட்டுமே கண்காட்சியில் பங்கேற்கவுள்ளன.
அதேபோன்று 17 மதரஸாக்களில் 6 மதரஸாக்கள் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளன.
மேலும், 25ஆம் திகதி அல் ஹிலால் மத்திய கல்லூரியின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இறுதி நிகழ்வான 26ஆம் திகதி நேரடி ஒளிபரப்புக்களும் ஏற்பாட்டுக் குழுவின் மூலம் ஏற்பாடு செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



(அக்ரம் லுதுபி)
