உயர்தரம் சித்தியடைந்தும் பல்கலை தெரிவாகாத மாணவர்களுக்காக “வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் – 2026” – விண்ணப்பம் கோரல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகாத மாணவர்களுக்காக, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கான “வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம்” 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களில் சித்தியடைந்து பொதுச் சாதாரண சோதனையிலும் சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 21 உயர்கல்வி நிறுவனங்களின் கீழ் 163 பட்டப்படிப்புகளை பயில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கடன் செலுத்தும் முறை:
பட்டப்படிப்பை முடித்த பிறகு, கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவதற்கு ஒரு வருட அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னர், முழுவட்டியில்லா கடன் தொகையையும் 84 சம தவணைகளில் (07 ஆண்டுகளில்) செலுத்தி முடிக்க வேண்டும். பயிலும் பட்டப்படிப்பின் கால அளவிற்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்தும் காலமும் மாறுபடும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பிரதேச செயலகத்தில் உள்ள திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், கடன் உதவி பெற விரும்பும் மாணவர்கள் விரைவாகப் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கம்பஹா மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திக கொஸ்கொல்லவத்த தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஊடகப்பிரிவு – கம்பஹா
