அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் தொழுகை விரிப்புக்கள் கையளிப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தினால் புத்தளம் மாவட்டக் கிளைக்கு வழங்கப்பட்டு, அதன் ஊடாக புத்தளம் நகரக் கிளைக்கு கையளிக்கப்பட்ட தொழுகை விரிப்புகள் (முஸல்லாக்கள்) புத்தளம் நகரக் கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் முஸல்லா வழங்கும் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், நாகவில்லு பகுதியில் இயங்கி வரும் அல்மனார் மத்ரஸாவிற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் புத்தளம் நகரப் பகுதியில் அமைந்துள்ள 121 பள்ளிவாசல்கள் மற்றும் 12 மத்ரஸாக்களுக்கு தேவையான முஸல்லாக்களை கட்டம் கட்டமாக வழங்கும் சமூக சேவைத் திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களில் தொழுகை, மார்க்கக் கல்வி மற்றும் ஏனைய இஸ்லாமிய செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மார்க்க நிறுவனங்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அந்த வகையில், நாகவில்லு பகுதியில் சிறப்பாக இயங்கி வரும் அல்மனார் மத்ரஸாவின் தேவையை கருத்திற்கொண்டு, அதற்குத் தேவையான முஸல்லாக்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சார்பில் அஷ்ஷெய்க் இமாம்தீன் அஷ்ரபி, அஷ்ஷெய்க் முஹ்ஸின் நத்வி மற்றும் அஷ்ஷெய்க் ரகீப் ரஷாதி ஆகியோர் கலந்துகொண்டு, மத்ரஸாவின் பொறுப்புதாரிகளிடம் முஸல்லாக்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
முஸல்லாக்களைப் பெற்றுக்கொண்ட மத்ரஸா பொறுப்புதாரிகள், மத்ரஸாவின் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிறைவேற்றும் நோக்கில் தொடர்ச்சியாக சமூக மற்றும் மார்க்க சேவைகளை முன்னெடுத்து வரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளைக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மார்க்க நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்தகைய சமூக சேவைத் திட்டங்கள், மத்ரஸாக்களின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மார்க்கப் பணிகளின் முன்னேற்றம், சமூக ஒற்றுமை மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையத்திற்கும் புத்தளம் மாவட்ட கிளைக்கும் நகரக்கிளை தமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
(எம்.யூ.எம்.சனூன்)
