உள்நாடு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத, கலாசார அடையாளத்துடன் சீருடை அணிய அனுமதி மறுப்பு? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கடும் கண்டனம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றதாகக் கூறப்படும் 09 சுகாதார உதவியாளர்களுக்கு, தங்களது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பேணிக்கொண்டு சீருடை அணிந்து கடமையில் இணைவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச ஊழியர்களின் சீருடை தொடர்பான அரச சுற்றுநிருபங்களில், உத்தியோகத்தர்கள் தங்களது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பேணிக்கொண்டு சீருடையை அணிவதற்கான ஏற்பாடுகள் காணப்படுவதாகவும், அவ்வாறு ஆடை அணியும் போது கடைப்பிடிக்க வேண்டிய வரையறைகளும் குறித்த சுற்றுநிருபங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சுற்றுநிருபங்களுக்கு முரணான வகையில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது கவலைக்குரிய விடயம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 14(1)(e) பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மதத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையை உறுதி செய்வதாகவும், அரச நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் சட்டத்தின் முன் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அரச சேவை என்பது இன, மத மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டிய ஒரு பொது சேவையாகும். எனவே, எந்தவொரு அரச நிறுவனத்திலும் இனவாதம், மதவாதம் அல்லது பிரதேசவாத சிந்தனைகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட வைத்தியசாலை அல்லது அரச நிறுவனத்தை ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மாத்திரம் உரித்தானதாகக் காட்டும் எந்தவொரு அணுகுமுறையும் அரச சேவையின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 09 சுகாதார உதவியாளர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் கடமையில் இணைத்துக்கொள்வதுடன், அவர்களது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பேணிக்கொண்டு விதிமுறைகளுக்கு அமைவாக சீருடை அணிந்து கடமையாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் பொறுப்பானவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களின் சீருடை மற்றும் மத, கலாசார உரிமைகள் தொடர்பான நடைமுறைகள் குறித்து அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை மீண்டும் வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த விவகாரம் வெறுமனே பேச்சுவார்த்தையுடன் முடிவடையாமல், சட்டம் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் உறுதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பன்மைத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் கொண்ட இலங்கையில், மத மற்றும் கலாசார அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அரச ஊழியர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *