உலகம்

சிதம்பரம் அருகே தீ விபத்து: 16 வீடுகள் எரிந்து சேதம் – பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் மு. தமிமுன் அன்சாரி MLA

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட B. ஆதிவராகநல்லூர் அருகே உள்ள பாரே கான் தைக்கால் மேட்டுத் தெருவில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் தீக்கிரையாகி முற்றாக சேதமடைந்துள்ளன.

மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த தீ விபத்தில், அப்பகுதியில் வசித்து வந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் தலா ரூ.5,000 நிவாரண உதவியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று (9) சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதன்போது, பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உடைகள் வழங்கப்பட்டன. அவற்றை மு. தமிமுன் அன்சாரி MLA நேரில் வழங்கினார்.

மேலும், தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த ஆதார் அட்டைகள், அரச ஆவணங்கள் மற்றும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *