உள்நாடு

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் – ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவிப்பு

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர்.

குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சை மையங்களுக்குள் பெற்றோர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் தங்களது மன ஒருமைப்பாட்டைப் பேணவும், எவ்வித பதற்றமுமின்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் வசதியாக, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே, பரீட்சை மையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாளை காலை 9:30 முதல் 10:45 வரை இரண்டாம் பகுதி (Paper II) வினாத்தாளுக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11:15 முதல் நண்பகல் 12:15 வரை முதலாம் பகுதி (Paper I) வினாத்தாளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்படும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் படித்து, தங்களது சுட்டெண்ணை துல்லியமாக எழுதுவதுடன், வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை நேரடியாக எழுத வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கண்டறிக
Travel Guides & Travelogues
Geographic Reference
Time & Calendars

அத்துடன், பரீட்சை மண்டபத்தினுள் கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த இலத்திரனியல் சாதனங்களையும் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏதேனும் அசாதாரண அல்லது அனர்த்த சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, 0113 – 66 81 19, 0113 – 66 80 26, 0113 – 66 80 32 மற்றும் 0113 – 66 80 87 ஆகிய இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *