உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஜனாதிபதியின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பொறுப்புக்கான மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, கல்முனை மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.

இதன்போது, கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் முஸ்லிம் பெண் சுகாதாரப் பணியாளர்களின் ஆடை தொடர்பான பிரச்சினையை விசேடமாக எடுத்துரைத்தார். இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கமைய உரிய சுற்றுநிருபமொன்றை வெளியிடுவதற்கும், வைத்தியசாலை நிர்வாகம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தலையீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அத்துடன், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விரைவான தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதேபோன்று, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு இதுவரை கிடைக்கப்பெறாமையால் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி மற்றும் நோயாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களையும் எடுத்துரைத்தார். குறித்த கட்டிட நிர்மாணத்திற்கான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், கல்முனை பிரதேச செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் நிரந்தர அதிகாரிகள் இல்லாத நிலை காணப்படுவதால் நிர்வாகச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்நிறுவனங்களுக்கு நிரந்தர அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருப்பதனால் பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி, அக்கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் கல்முனைப் பகுதியில் இடம்பெற்ற பாரிய தீ விபத்துச் சம்பவத்தையும் எடுத்துரைத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர், கல்முனை மாநகர சபையின் தற்போதைய தீயணைப்பு இயந்திரங்கள் பழமையானவையாகவும் போதிய திறனற்றவையாகவும் இருப்பதால், அவசரகாலத் தீயணைப்புப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார். சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் கல்முனை மாநகரப் பிரதேசத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நவீன தீயணைப்பு வாகனம் மற்றும் அதற்குத் தேவையான உபகரணத் தொகுதியை வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அவசரமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அம்பாறை மாவட்ட மக்களின் நீண்டகாலத் தேவைகள், அடிப்படை வசதிகள், சுகாதாரத்துறை மேம்பாடு, அரச நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றை மையப்படுத்தியே இச்சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் அடங்கிய எழுத்துமூல மகஜரையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது கையளித்தார். இவ்விடயங்கள் தொடர்பில் அக்கரை செலுத்தி ஜனாதிபதியிடம் கலந்துரையாடி துரிதகதியில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பொறுப்புக்கான மேலதிக செயலாளர் ரோஷன் கமகே முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களிடம் உறுதியளித்தார்.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *