புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் (03) கல்லூரி வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் விமர்சையாகவும் நடைபெற்று முடிந்தன.
கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் நளீமி தலைமையில் நடைபெற்ற இவ்வருடாந்த விளையாட்டு விழாவில், சிறப்பு அதிதிகளாக கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் எச். அஜ்மல் மற்றும் முகாமையாளர்
ஏ.ஆர்.ஏ.பஸ்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் ஜாஸில் (நளீமி), விரிவுரையாளர்கள், கல்லூரி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
தேசியக் கொடி மற்றும் கல்லூரிக் கொடிகள் ஏற்றப்பட்டு மாணவிகளின் இல்ல அணிவகுப்பு மரியாதையுடன் விழா ஆரம்பமானது.
தொடர்ந்து நடைபெற்ற தடகள மற்றும் களப் போட்டிகளில் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும் விளையாட்டு உணர்வுடனும் பங்கேற்றனர்.
போட்டிகள் நடைபெற்ற அனைத்துக் கட்டங்களிலும் மாணவிகளின் கட்டுக்கோப்பான ஒழுக்கம், பரஸ்பர ஒற்றுமை, குழு ஒத்துழைப்பு, விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவப் பண்புகள் மிகச் சிறப்பாக வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவிகளின் உடல் ஆரோக்கியம், மனவலிமை, தலைமைத்துவத் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விளையாட்டுப் போட்டி மாணவிகளின் பல்துறை ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தும் சிறந்தவொரு களமாக இவ்வாண்டும் அமைந்திருந்தது.
நிகழ்வை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்த கல்லூரியின் இணைப்பாடவிதான செயற்பாட்டுக் குழுவிற்கு கல்லூரி நிர்வாகம் தனது விசேட பாராட்டுகளையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.
அத்துடன், இல்லப் பொறுப்பாசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் நிர்வாகத்தினால் உரித்தாக்கப்பட்டன.
மாணவிகளிடையே விளையாட்டு உணர்வு, கட்டுக்கோப்பான ஒழுக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்திய ஒரு வெற்றிகரமான நிகழ்வாக இவ்வருட விளையாட்டுப் போட்டி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












எம்.யூ.எம்.சனூன்
