உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் மாகாண ஆளுனருடன் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களுக்கும், உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே (03) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இதில், RE-VIVE (துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சாத்தியமான பொருளாதாரங்கள் மூலம் பிராந்திய வலுவூட்டல்) திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் , துறைசார் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கொட்பே வளைகுடா மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி, பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி வலயம் மற்றும் அருகம்பே சுற்றுலா அபிவிருத்தி வலயம் ஆகிய மூன்று முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான திட்டங்களை அவர்கள் ஆய்வு செய்து, எதிர்காலப் பணிகளுக்கான ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர்.
உலக வங்கியின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேவையான ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பிறகு, இத்திட்டம் 2027-ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஹஸ்பர் ஏ.எச்
