நாளை கருவிகளுடன் பொற்காலத்தை மீளமைக்கும் உஸ்பெகிஸ்தானின் புதிய மறுமலர்ச்சி
மத்திய ஆசியாவின் மையப் பகுதியில் அமைதியானதொரு புரட்சி நடைபெற்று வருகின்றது. இது ஆயுதங்களால் நடத்தப்படும் புரட்சியல்ல; மாறாக பழங்கால ஏடுகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மைக்ரோசிப்கள் மூலம் முன்னெடுக்கப்படும் ஓர் அறிவுப் புரட்சியாகும். ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் (Shavkat Mirziyoyev) தலைமையின் கீழ், உஸ்பெகிஸ்தான் தன் இடைக்காலப் ‘பொற்காலத்தின்’ பெருமையை மீண்டும் நி லைநாட்ட உழைத்து வருகின்றது. அக்காலத்தில் சமர்கந்த் (Samarkand) மற்றும் புகாரா (Bukhara) ஆகிய நகரங்கள் உலகின் முன்னணி அறிவியல், கவிதை மற்றும் தத்துவ மையங்களாகத் திகழ்ந்தன. இந்த மீள்மலர்ச்சி முயற்சியின் விசேட அம்சம் என்னவெனில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மைமிக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், உலகிற்குப் பகிரவும் அதிபர் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்.
முன்னோக்கிச் செல்ல பின்னோக்கிப் பார்க்கும் ஒரு தேசம்
நூற்றாண்டுகளுக்கு முன்பு, ‘டிரான்சோக்சியானா’ (Transoxiana) என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, வரலாற்றின் சிறந்த அறிஞர்கள் பலரை உருவாக்கியது. வானியலாளரான மன்னர் உலுக் பெக் (Ulugh Beg), சமர்கந்த்ல் ஒரு வானியல் ஆய்வகத்தைக் கட்டி, விண்மீன்களை வியக்கத்தக்க துல்லியத்துடன் வரைபடமாக்கினார். கொரேஸம்மின் (Khorezm) மாமூன் அகாடமியைச் சேர்ந்த அறிஞர்கள், ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே கணிதத்திலும் மருத்துவத்திலும் பெரும் மைல்கற்களை எட்டினர். அதிபர் மிர்சியோயேவ் பெரும்பாலும் இந்த வரலாற்றுச் சிறப்பைக் சுட்டிக்காட்டிப் பேசுகிறார். உலுக் பெக்கை வெறும் அறிவியலாளராக மட்டுமன்றி, அறிவுக்கு முன்னுரிமை அளித்த ஒரு சிறந்த ஆட்சியாளராகவும் அவர் புகழ்கிறார். நாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள இரு பொற்காலங்களைத் தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானை மீண்டும் அறிவு மற்றும் கலாசார மையமாக நிலைநிறுத்துவதற்கான இக்காலகட்ட முயற்சியை ஜனாதிபதி “மூன்றாவது மறுமலர்ச்சி” என்று குறிப்பிடுகிறார்.
இது வெறும் கடந்த கால நினைவலைகள் மட்டுமன்று; அரசின் முதன்மைக் கொள்கையுமாகும். 2016-இல் பதவியேற்றதிலிருந்து, அதிபர் மிர்சியோயேவ் முன்னர் தனிமைப்பட்டிருந்த ஒரு நாட்டை உலகிற்குப் படிப்படியாகத் திறந்தார். வெளிநாட்டு ஆய்வாளர்களை வரவேற்றதுடன், விசா விதிகளையும் தளர்த்தி, உஸ்பெகிஸ்தானின் வரலாற்றையும் அதன் மக்களையும் உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்த அழைப்பு விடுத்தார்.
நினைவுகளுக்கான நினைவுச்சின்னங்களைக் எழுப்புதல்
இந்த லட்சியத்தின் தெளிவான குறியீடாகத் தஷ்கண்டில் (Tashkent) இவ்வாண்டு ஒரு பிரம்மாண்ட மையம் உருவெடுத்துள்ளது: 40 நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டு, 2026 மார்ச் மாதத்தில் திறக்கப்பட்ட இஸ்லாமிய நாகரிக மையம் (Center of Islamic Civilization). இம்மையத்தில் இஸ்லாமிய உலகின் மிகச் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்றான 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘உத்மானி குர்ஆன்’ (Uthman Qur’an) வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராய்ச்சி ஆய்வகங்கள், பழங்கால ஆவணப் பராமரிப்புப் பட்டறைகள் மற்றும் ஆவணக் காப்பகங்களும் அமைந்துள்ளன. இது ஏற்கனவே உலகின் மிக அழகிய புதிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகப் புகழப்பபட்டுள்ளது. பாரம்பரிய அருங்காட்சியகங்களைப் போல நிலையான காட்சிகளைக் கொண்டிராமல், பார்வையாளர்களை வரலாற்றுக்குள் நேரடியாக அழைத்துச் செல்லும் அதிநவீன, தொழில்நுட்ப வசதிகளுடன் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. உஸ்பெகிஸ்தான் 8,000-க்கும் மேற்பட்ட கலாசார பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது. இதில் ஐந்து யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளங்களும் அடங்கும். இவற்றைப் பாதுகாக்க அரசாங்கம் ஒரு தனித்துவமான கலாசார பாரம்பரிய முகவரகத்தை உருவாக்கியுள்ளது. புகாரா நகரம் யுனெஸ்கோவின் ‘இலக்கிய நகரம்’ (City of Literature) அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளது. அத்துடன், 2025-இல் சமர்கண்ட் நகரம் யுனெஸ்கோவின் பொது மாநாட்டை நடத்தியது — இது நாட்டின் சர்வதேச கலாசார அந்தஸ்து எவ்வளவு தூரம் உயர்ந்துள்ளது என்பதைக் காட்டும் ஓர் அரிய கௌரவமாகும்.
பழமையான நகருக்குள் நுழையும் செயற்கை நுண்ணறிவு
உஸ்பெகிஸ்தானின் இந்த அணுகுமுறையை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால், செயற்கை நுண்ணறிவை வெறும் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமன்றி, கலாசாரப் பாதுகாப்பிற்கான ஒரு கருவியாக ஏற்றுக்கொண்டமையாகும். நாடு முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன: நுழைவு அமைப்புகள், காட்சிப்பொருட்கள் மற்றும் ஆவணச் சேகரிப்புகள் இணையத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன. QR குறியீடுகள், மெய்நிகர் உலாக்கள் (Virtual tours) மற்றும் மொபைல் செயலிகள் மூலம் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எவரும் பல நூற்றாண்டு பழமையான பொக்கிஷங்களை அணுக முடியும். அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அட்டவணைப்படுத்தப்படுகின்றன; இதனால் அசல் ஏடுகள் சிதையாமல் பாதுகாக்கப்படும் அதேவேளையில், எதிர்வரும் தலைமுறையினரும் அவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.
சுற்றுலாத் துறையும் AI தொழில்நுட்பத்தால் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. புகாராவிற்கு வரும் ஒரு சுற்றுலாப் பயணி, தனது விருப்பத்திற்கு ஏற்ப வரலாற்று வழியை உருவாக்க AI செயலியைப் பயன்படுத்தலாம் — ஒரு பயணி 15-ஆம் நூற்றாண்டு வானியலை ஆராயலாம், மற்றொருவர் பட்டுப்பாதை (Silk Road) காலத்தைப் பற்றி அறியலாம். ஹோட்டல் வசதிகளை விரிவுபடுத்தி, மின்-விசாவை (e-visa) எளிமையாக்கியதன் மூலம், 2026-ஆம் ஆண்டில் 1.2 கோடி (12 Million) சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கான லட்சியத் திட்டத்திற்கு இத்தொழில்நுட்பம் வலுசேர்க்கிறது.
கலாசாரத்தில் AI தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் சார்ந்த சர்வதேச உரையாடல்களிலும் உஸ்பெகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. 2025-இல், யுனெஸ்கோ மற்றும் உஸ்பெகிஸ்தானின் கலை மற்றும் கலாசார மேம்பாட்டு நிதியம் இணைந்து சமர்கண்டில் அருங்காட்சியகங்களில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்த சர்வதேச மாநாட்டை நடத்தின. பிரான்ஸ், யுனெஸ்கோ மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து, மனித பாரம்பரியத்தை இடமாற்றம் செய்யாமல் தொழில்நுட்பம் எவ்வாறு சேவையாற்ற முடியும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகள் குறித்த ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் சர்வதேச விருதொன்றை நிறுவுவதற்கும் உஸ்பெகிஸ்தான் உதவியுள்ளது.
இது ஏன் முக்கியமானது?
உலகின் மிக இளமையான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டிற்கு — இங்கு சராசரி வயது 28-க்கு குறைவாகும் — இந்த பழைய மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் இணைப்பு மிக முக்கியமானதாகும். இது வெறும் கல் தூண்களையோ அல்லது மென்மையான காகிதங்களையோ பாதுகாப்பது பற்றியது மட்டுமல்ல; மாறாக, இளம் உஸ்பெக் மக்களுக்குத் தங்கள் தாய்நாட்டை உலகின் சிறந்த கற்றல் மையமாக மாற்றிய வரலாற்றுடன் ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதாகும். வரலாற்றை நவீன கருவிகளுடன் இணைப்பதன் மூலம், பாரம்பரியமும் தொழில்நுட்பமும் எதிரிகள் அல்ல — அவை சிறந்த பங்காளிகள் என்பதை அதிபர் மிர்சியோயேவ் தலைமையிலான அரசு நிரூபித்து வருகிறது.
இந்த ‘மூன்றாவது மறுமலர்ச்சி’ தனது இலக்கை முழுமையாக எட்டுமா என்பது வரும் ஆண்டுகளில் மதிப்பிடப்படும். ஆனால் அதன் பயணம் சரியான திசையிலேயே செல்கிறது. உஸ்பெகிஸ்தான் தனது கடந்த காலத்தை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காக மட்டும் தூசி தட்டி வைக்கவில்லை. உலுக் பெக், இப்னு சீனா (Ibn Sina) மற்றும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த அறிஞர்களின் சாதனைகள் மறக்கப்படாமல், காலத்தில் உறைந்துபோகாமல், நாட்டின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை உறுதிசெய்ய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன் வரலாற்றை மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது.




ஃபஸ்ஹான் நவாஸ்
