உள்நாடு

நீதித் துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிய தெரிவுக் குழுவொன்றை நியமிக்கவும்; சஜித் பிரேமதாச அரசிடம் வலியுறுத்து

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நீதித்துறை கட்டமைப்பினுள் சேவை புரிந்து வரும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை திருத்தும் பணியை துரிதமாக முன்னெடுத்து வந்த போதிலும், இது தொடர்பில் முக்கிய தரப்பினருடன் எத்தகைய கலந்தாலோசனையும் நடத்தப்படாமல், முறையற்றதும் ஒழுங்கற்றதுமான வழிமுறை ஊடாக கொண்டு வரும் அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஏனைய சட்டத் திருத்தங்கள் தொடர்பில் தெளிவான குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும், பாரிய எதிர்ப்பும் உருவாகி வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (03) விசேட கூற்றை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பாராளுமன்றத்திற்கு வருமாறு அழைப்பு

இத்தகையதொரு சூழ்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தலைமையிலான குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த முக்கியமான விடயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். எனவே, எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்து, 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தற்போது அவசியமான காரணியொன்றாக காணப்படுவதனால், 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தும் பணியை நிறைவேற்றுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆதரவு நல்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதன் ஊடாக முறையான கலந்துரையாடலும், முறையான அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றமும் ஊடாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த அனைத்துப் பரிந்துரைகளும் சபாநாயகரிடம் வழங்கப்பட்டன

அத்துடன், சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளமை, நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையாக நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு நீடிக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடும் இத்தகையதொரு சந்தர்ப்பத்தில், வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்து, இந்தப் பாரிய பிரச்சினைக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். இந்தத் தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.

நமது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனம், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாத்தல் என்ற நல்லெண்ண நோக்கங்களைக் கருத்திற்கொண்டு இதனை நாம் பரிந்துரைக்கிறோம். நமது நாட்டிற்குத் தேவையான ஜனநாயக முறையை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்பதும், அதனை வலுவிழக்கச் செய்வது துரதிர்ஷ்டவசமான ஒரு விடயமாகும். ஐக்கிய மக்கள் சக்தி நமது நாட்டின் ஜனநாயக முறையைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்தும் உறுதியுடன் செயற்படும். அதற்காக சாத்தியமான உட்பட்ச முயற்சிகளை மேற்கொள்ளும். மக்கள் பலத்துடன் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *