ஹெட ஓயா திட்டத்தை மக்களுக்கு குடிநீர், நீர்ப்பாசனம் வழங்கவென துரிப்படுத்த பணிப்பு
பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டத்தில் வீடமைப்பு அமைச்சர்

பொத்துவில், லாஹுகல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், இப்பகுதிகளில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் வயற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதியை செய்து கொடுப்பதற்கும் ஏற்ப ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகள் ஜனாதிபதியினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதையும் அமைச்சர் இச்சயம் சுட்டிக்காட்டினார்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த சமயமே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயம் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, லஹுகல, பொத்துவில், சியம்பலாண்டுவ பிரதேசங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், இப்பிரதேசங்களில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் வயற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதியை செய்து கொடுப்பதற்கும் ஏற்ற வகையில் ஹெட ஓயா நீர்ப்பாசன திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கடந்த மே மாதம் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ஹெட ஓயா திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு நான் கொண்டு வந்தேன். அதற்கமைய இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளை ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கினார். அதனால் இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியுமா? என வினவினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சரின் அனுமதியோடு பதிலளித்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார, இத்திட்டத்தை முன்னெடுப்பது குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் விஷேட கூட்டமொன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் பங்குபற்றினர். இத்திட்டத்தை முன்னெடுக்கும் போது இடம்பெயரும் மக்களை சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றுவதற்கான காணிகளை வழங்குவதற்கு
சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களமும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து திட்டத்தை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
