உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – இலங்கை ஜமாஅத் இஸ்லாமி உயர்பீடத்தினருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீராக நியமிக்கப்பட்டுள்ள அஷ்-ஷைக் ஜே.எம். அஷ்ரப் நளீமி, முன்னாள் அமீர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி மற்றும் உயர் பீட உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்று குழு உறுப்பினர்களை (28) சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு மிகவும் சினேகபூர்வமானதும், பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கிலும் இடம்பெற்றது.

இதன்போது முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சமூகத்தின் ஒற்றுமையைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும், முஸ்லிம் சமூகத்தின் நலனையும் ஐக்கியத்தையும் இலக்காகக் கொண்டு அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கும், சமூகத்தின் நியாயமான விடயங்களில் ஒருமித்த அணுகுமுறையுடன் ஒரே குரலாக செயற்படுவதற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

எதிர்காலத்திலும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புடனும் நல்லுறவுடனும் இணைந்து செயற்படுவதற்கான தமது எதிர்பார்ப்புகளை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.

சந்திப்பின் நிறைவில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெளியீடுகளான சில முக்கிய நூல்கள் கௌரவ அமீர் அஷ்-ஷைக் ஜே.எம். அஷ்ரப் நளீமி அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இதில், ஜம்இய்யா சார்பில் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், உப தலைவர்களான அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் மற்றும் அஷ்-ஷைக் எச். உமர்தீன், உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் ஆகியோருடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *