வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது பேருவளை கிரேட் ஸ்டார் அணி
பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்காக நடாத்திய நொக்கவுட் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தர்கா நகர் ரெட் ஸ்டார் உதைப்பந்தாட்ட கழகமும் பேருவளை கிரேட் ஸ்டார் உதைப்பந்தாட்ட கழகமும் இறுதிப் போட்டியில் மோதிய நிலையில் பேருவளை கிரேட் ஸ்டார் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இச் சுற்றுப்போட்டியில் பேருவளை உதைப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 19 உதைப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றின.
போட்டி ஆரம்பமாகி இடைவேளைக்கு முன் 28ஆம் நிமிடத்தில் கிரேட் ஸ்டார் அணி வீரர் முஹம்மத் அப்ஸால் தமது அணிக்கு கோல் ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார்.
அத்தோடு போட்டி மேலும் சுறுசுறுப்பாகியதோடு, இரு அணி வீரர்களும் தமது அணிக்கு மேலும் கோல் பெற்றுக் கொடுக்க கடும் முயற்சி செய்தனர்.
இப்போட்இயில் சிறந்த வீரராக கிரேட் ஸ்டார் அணியைச் சேர்ந்த முஹம்மத் ஸதான் தெரிவாகியதோடு, சிறந்தா கோல் காப்பாளராக ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தைச்சேர்ந்த முஹம்மத் மிஸ்காத் தெரிவுசெய்யப்பட்டார்.
இப்போட்டிக்கு எம். ரவீந்திர நடுவராகவும் முஹம்மத் முஸம்மில் – முஹம்மத் அஸ்லம் ஆகியோர் துணை நடுவர்களாகவும் முஹம்மத் பாரி நான்காவது நடுவராகவும் கடமையாற்றினர்.
சுமார் 3 தசாப்தங்களுக்கு மேலாக நடுவராக சேவையாற்றி விளையாட்டு ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற முஹம்மத் முஸம்மில் இதன்போது கௌரவிக்கப்பட்மையும் விசேட அம்சமாகும்.
அன்றைய தினம் நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு பேருவளை உதைப்பட்டாட்டச் சங்கத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். றிஸ்வான் தலைமை வகித்தார். இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜீவ ரணசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன உப தலைவர்களான ரஞ்சித் ரொட்ரிகோ, கலாநிதி மனிலால் பிரணாந்து ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பேருவளை பிரதேச சபைத் தலைவர் பைஸான் நைஸர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம், இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ரூமி ஹாஷிம், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டணர்.
பேருவளை உதைப்பந்தாட்ட சங்க செயலாளர் முஹம்மத் ஸினான் பொருளாளர் ஏ.ஜே.எம். அக்பர் உட்பட பேருவளை உதைப்பந்தாட்ட சங்க முக்கியஸ்தர்கள், மேற்படி உதைப்பந்தாட்டச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழக முக்கியஸ்தர்கள், மற்றும் பல பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.













பேருவளை பீ.எம். முக்தார்
