மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலில் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வு
இலங்கையில் ஷாதுலியா தரீக்கா எனும் ஆன்மீக வழிமுறையை அறிமுகம் செய்த ஆத்மீக ஞானி சங்கைக்குரிய அஷ்ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் பெரிய மௌலானா (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வு (1100 ஆண்டுகள் பழமைமிகு) இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலுடன் இணைந்த சாதுலியா ஸாவியாவில் சிறப்பாக நடைபெற்றது.
ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய சேஹுஸ் ஸஜ்ஜாதா அஷ்ஷெய்ஹ் மஹ்தி அப்துல்லாஹ் அல்பாஸி அல் மக்கீ அஷ்ஷாதுலி நாயகம் காலி அலிய்யா அரபுக் கல்லூரி பணிப்பாளர் கலீபத்துல் குலபா மௌலவி அல் ஹாஜ் எம்.இஸட்.எம் முஹம்மத் ஆலிம் (பாரி) ஆகியோரின் அனுமதியின் கீழ் ஜமாஅத் சபைத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல் ஹாஜ் எம்.ஏ.எம் ஹனபியின் வழிகாட்டலின் கீழ் கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), மௌலவி அல் ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் ஜெஸூல் (அஷ்ரபி – யமனி, பீ.ஏ) ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் நடைபெற்றமை குறிப்பிட தக்கது.
கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – யமனி, பீ.ஏ) இந்த நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அஸர் தொழுகையைத் தொடர்ந்து அல்குர்ஆன் தமாம் வைபவமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து வலீபா யாகூத்தியாவும் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஹழரா (திக்ர்) மஜ்லிஸும் அதனையடுத்து மார்க்கச் சொற்பொழிவும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வை மேற்படி பள்ளிவாசல் மற்றும் ஸாவியா நிருவாகம் ஏற்பாடு செய்ததோடு, உலமாக்கள் உட்பட இஹ்வான்களும் கலந்து கொண்டனர்.



பேருவளை பீ.எம். முக்தார்
