உள்நாடு

மேலதிக மாவட்ட பதிவாளராக புத்தளத்தை சேர்ந்த ராசிப் நளீம் நியமனம்

புத்தளம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் சேவை தரம் II, வகுப்பு III தேர்வில் மாவட்டத்திலிருந்து தெரிவான ஒரேயொருவர் என்ற சிறப்பை புத்தளம் நகரை சேர்ந்த முஹம்மத் நளீம் முஹம்மத் ராசிப் பெற்றுள்ளார்.

இத்தேர்வில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய இவர், மேலதிக மாவட்ட பதிவாளர் எனும் உயர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுள்ளார்.

ராசிப் அவர்களின் கல்விப் பயணம் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் ஆரம்பமானது. தொடர்ந்து புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையிலும், புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் உயர்தரப் பரீட்சையிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இளங்களை விஞ்ஞானமானி பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

கல்வித் திறமை மட்டுமல்லாமல், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் 2024/25 கல்வியாண்டின் இளம் மாணவர் வழிகாட்டியாகவும், புத்தளம் மேர்சி கல்வி வளாகத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது வெற்றிக்கு புத்தளம் வாழ் பொதுமக்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கப் பணியாளர் சேவையில் புத்தளத்தின் பெயருக்கு பெருமை சேர்த்துள்ள ராசிப் அவர்களின் எதிர்காலப் பணிகள் சிறக்க பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான அடைவுகள் புத்தளம் இளம் தலைமுறையினருக்கு பெரும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

எம்.யூ.எம்.சனூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *