சோஷியல் டிவி மீடியா நெட்வேர்க்கின் 6ஆம் ஆண்டு நிறைவு விழா
சோஷியல் டிவி மீடியா நெட்வொர்க் (தனியார்) லிமிடெட் நிறுவனத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழா (11) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) தேசிய அமைப்பாளருமான அஷ்ரப் தாஹிர் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் சட்டத்தரணி ரியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். லத்தீப், கிழக்கு மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தைத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் எம்.பி. முகம்மது சுப்யான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் அக்கரைப்பற்று நகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த வெதகே, இலங்கை கடற்படை கல்முனை கட்டளை அதிகாரி, நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் தலைவர் அஷ்-ஷெய்க் மௌலவி எம்.ஐ. ஜௌபர் (பலாஹி), ZABCO நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அல்-ஹாபிஸ் மௌலவி ஏ.ஏ.எம். அக்ரம் (ஷரஃபி) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சோஷியல் டிவியின் ஆறு ஆண்டுகால பயணத்தையும் சாதனைகளையும் பதிவு செய்யும் “சோஷியல் டிவியின் வெற்றிப் பயணம்” எனும் நினைவு நூல் வெளியிடப்பட்டது.
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிர்வாகத்தினர், குழு உறுப்பினர்கள், செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 6ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவுக் கேக்கும் வெட்டி கொண்டாடப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில், ஹியூமன் லிங்க் விசேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பரிசுப் பொதிகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அதேபோன்று, அல்-அதான் பாடசாலை மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், இவ்விரு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் அவர்களது அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
சமூகப் பொறுப்புணர்வு, ஊடகப் பணியின் அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயச் சேவையை பிரதிபலிக்கும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.








(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
