உள்நாடு

கல்விச் சாதனையாளர்களைப் பாராட்டி கௌரவித்த அ.இ. ஜ. உலமா புத்தளம் நகரக் கிளை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் கல்வி உபகுழுவின் ஏற்பாட்டில், 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாணவர்களின் கல்விச் சாதனைகளை மதிப்பளிக்கும் நோக்கத்துடனும், எதிர்காலத்தில் மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற ஊக்குவிக்கும் எண்ணத்துடனும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான அன்பளிப்புகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இவ்வன்பளிபுகள், மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாக அமைந்தன.

மேலும், உயர்கல்வியை நோக்கி பயணிக்கும் மாணவர்கள் தங்களது இலக்குகளைத் தெளிவாக நிர்ணயித்து, சிறந்த கல்வி மற்றும் நற்பண்புகளுடன் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் பயனுள்ள வழிகாட்டல்களும் ஊக்கமளிக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

கல்வியுடன் சேர்ந்து நல்லொழுக்கம், மார்க்கப் பற்றுதல், சமூகப் பொறுப்பு மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றின் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி உரையாற்றினார். கல்வி உபகுழு பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஸல்மான் இஹ்ஸானி, உப செயலாளர் அஷ்ஷெய்க் இமாம்தீன் அஷ்ரபி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன், புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கல்வியில் சிறந்து விளங்கிய அனைத்து மாணவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்தச் சாதனை அவர்களின் எதிர்கால உயர்வுகளுக்கான உறுதியான அடித்தளமாக அமையட்டும்.

அல்லாஹ் தஆலா இம்மாணவர்களுக்கு அறிவிலும், ஒழுக்கத்திலும், ஈமானிலும் மேலும் வளர்ச்சியை வழங்கி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள சிறந்த ஆளுமைகளாக உருவாக அருள் புரிவானாக. அவர்களின் கல்விப் பயணத்தில் தொடர்ந்தும் வெற்றிகளையும் பரக்கத்தையும் வழங்குவானாக. ஆமீன்.

கல்வி உபகுழு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *