உள்நாடு

அனர்த்தக் குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்; தேசிய அனர்த்த கூட்டத்தில் உதுமாலெப்பை கோரிக்கை

தேசிய மட்டத்தில் நமது தேசிய அனர்த்த குழு இயங்குவது போன்று பிரதேச செயலக மட்டத்தில் இயங்கும் பிரதேச மட்ட அனர்த்த குழுக்கள் அனர்த்தம் வந்தவுடன் உடனடியாக செயற்படுவதற்கு ஏற்றாற்போல் நமது உள்ளூராட்சி சபைகளுக்கான வாகனங்களை வழங்கி பிரதேச மட்ட அனர்த்த குழுக்களை பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பேரழிவு செயலாற்று பேரவையின் 17வது கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் 30.06.2026 ல் ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்ததுடன் உள்ளூராட்சி சபைகளுக்கான வாகன வசதிகளை வழங்குவதற்கான விஷேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் (பேராசிரியர்) சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோகபண்டார ஆகியோர் இச்சபையில் இருப்பதனால் அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சூறாவளி, பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது கிழக்கு மாகாணத்தின் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஒன்றிணைந்து தங்களின் இயந்திரங்களை கண்டிக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை புரிந்தனர்.

எமது அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை தெஹியத்தகண்டி, மஹஓயா, லஹுகல, தமன, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, இறக்காமம், கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், நிந்தவூர், நாவிதன்வெளி, காரைதீவு, ஆலையடிவேம்பு ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான இயந்திர வாகனங்கள் இல்லாத நிலமையில் அச்சபைகள் இயங்கி வருகின்றன.

எனவே, உள்ளூராட்சி சபைகளுக்கு இயந்திர வாகனங்களை வழங்குவதால் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கும் அனர்த்தக் குழு சக்தியுள்ளதாக செயற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். இது தொடர்பாக பதிலளித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, உள்ளூராட்சி சபைகளுக்கான வாகனங்கள் தொடர்பாகவும் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கும் அனர்த்தக் குழுவில் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை எடுப்பது பொருத்தமாக இருக்கும் எனவும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் இணைத் தலைவர்களாக மாகாண ஆளுநர்கள் வகிப்பதுடன் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்து கொள்வதால் இது குறித்து கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வருவது நல்லது என ஜனாதிபதி தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

(கே. எ. ஹமிட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *