உள்நாடு

நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி, முற்றிலும் இலவச ஆங்கிலக் கல்வித் திட்டம்

  • பைஸர் முஸ்தபா மன்றத்தினால் அறிமுகம்

பைஸர் முஸ்தபா மன்றம், நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முற்றிலும் இலவசமான ஆங்கிலக் கல்வித் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு, கொழும்பு – 10, பஞ்சிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மத்திய கல்லூரியில், அதிபர் உதேனி தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நாள் நிகழ்வில், பைஸர் முஸ்தபா மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 20 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

“நமது பிள்ளைகள்” (அப்பே தருவோ) எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆங்கிலக் கல்வித்திட்டத்தின் கீழ், முதற் கட்டமாக சுமார் 500 மாணவர்கள் அளவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

சிறப்புத் தகுதியும் அனுபவ ஆளுமையும் கொண்ட ஆங்கில ஆசிரியர் குழாமினால், வார நாட்களிலும் விடுமுறை நாட்களிலும், தரம் 06 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு இவ்வுயர்தர ஆங்கில மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா இங்கு உரையாற்றுகையில்,
“மாணவர்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஏனைய கல்வித் துறைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது போல், ஆங்கில மொழிக் கல்வியிலும் அதி உயர் தேர்ச்சி பெற முன்வர வேண்டும். ‘ஏஐ’ (AI) போன்ற தொழில் நுட்பங்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், மாணவர்கள் ஆங்கிலக் கல்விக்கும் மிக முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறான தொழில் நுட்ப அறிவுகளை மேலும் விருத்தியடையச் செய்து கொள்ளவும் ஆங்கிலக் கல்வி மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

மாணவர்கள் ஆங்கிலக் கல்வியைக் கருத்தில் எடுத்து படிப்பார்களேயானால், அவர்களின் எதிர்கால வாழ்க்கை நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. எனவேதான், மாணவர்களின் நலன் கருதி இவ்வாறான ஆங்கில வகுப்புக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் ஆங்கிலக் கல்வியை சிறப்புறக் கற்று, அதில் முன்னேற்றம் அடைந்து, பெருவெற்றி பெற வேண்டும் என்பதே, எமது மன்றத்தின் பிரதான நோக்கமாகும்” என்று குறிப்பிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *