உள்நாடு

போதைப்பொருள் மாஃபியாவை ஒழிக்கவும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் சமூக ஊடகக் கட்டுப்பாடுகளை பைஸர் முஸ்தபா எம்.பி. பரிந்துரை.

இலங்கை இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கும் சமூக ஊடக அடிமைத்தனத்திற்கும் இடையிலான ஆபத்தான தொடர்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா பாராளுமன்றத்தில் இன்று (25) வியாழக்கிழமை உரையாற்றினார்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை அவர் முன்வைத்ததுடன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் ஊடுருவிச் சென்று (Infiltrate) அவற்றை அழிப்பதற்கான புதிய சட்டப் பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைப்பதற்கும் “போதைப்பொருள் விருந்துகளை” (Drug Parties) ஏற்பாடு செய்வதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.

குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாவது போலவே, தொலைபேசிகளுக்கும் அடிமையாகி வருவதாகவும், இதன் மூலம் ஆபாசப் படங்கள் மற்றும் தற்கொலைக்குத் தூண்டும் இணையதளங்களை அவர்கள் அணுகும் ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைக் கட்டுப்படுத்த 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அவர் முன்மொழிந்துள்ளார். இது நிறைவேற்றப்பட்டால், ஆசியாவிலேயே இத்தகைய சட்டத்தைக் கொண்டு வரும் முதல் நாடாக இலங்கை திகழும்.

மேலும், போதைப்பொருள் மாஃபியாக்களின் மூலத்தைக் கண்டறிய இரகசியப் பொலிஸாரைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச சட்ட வழிமுறைகளை இலங்கையும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார். இது ஒரு அரசியல் விவகாரமல்ல என்றும், அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைத்து சமூக ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *