உள்நாடு

சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றார் ஏ.எல். தௌபீக்

அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் அவர்கள் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்
“சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக” (MN – 7- SUPRA GRADE) 2023.01.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம் 2026.06.01 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கி வைக்கப்பட்டது. ஆளுநரின் செயலாளர் பீ.வாகீசன், கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.

இப்பதவியுயர்வானது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில் விண்ணப்பிக்கத் தகுதியான கலாசார உத்தியோகத்தர்கள் தரம் I ஐ சேர்ந்தவர்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுவினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய விண்ணப்பித்து அதற்கமைவாக நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை மூலம் மாகாணத்தில் இருவர் மாத்திரமே நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர்தான் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல்.தௌபீக். மற்றையவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.ஜீ. நிமல்சிறி பண்டார என்பது குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான இவர், அரச சேவையில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளராக, ஆசிரியராக மற்றும் அதிபராக எட்டு வருடங்கள் சேவையாற்றிய நிலையில், போட்டிப் பரீட்சை மூலம் கலாசார உத்தியோகத்தராக நியமனம் பெற்று 2000 ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய நிலையில், 2009 இல் இருந்து அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராக நியமனம் பெற்று அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயங்களில் 17 வருடங்கள் மாவட்ட மட்ட கலாசார வேலைத்திட்டங்களை
எல்லோரது மனங்களையும் கவரும் வண்ணம் இன, மத வேறுபாடின்றி மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கான இப்பதவியுயர்வு கிடைத்திருப்பது மாகாண மற்றும் மாவட்ட மூவின கலைஞர்களது மனங்களிலும் மட்டில்லா மகிழ்வைத் தருகின்றது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கலாசாரப் பணிகளை மிகவும் சிறப்பாக செய்துவருகின்ற இவர், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பல பணிப்பாளர்களுடன் கடமையாற்றிய அனுபவங்களையும் ஆற்றல்களையும் பெற்றுள்ளார்.

இவரிடம் காணப்படும் பல திறமைகளின் பலனாகவும், மேலும் இவரின் அர்ப்பணிப்பு சேவைக்காகவும், இப்பதவி உயர்வுக்கான தரப்புள்ளிகள் தெரிவில் முதல் இடத்திற்கு தெரிவானார் என்பதனை தகவலறிந்த கலைஞர்கள் வட்டங்களில் பரவலாக சிலாகித்து பேசப்படுகிறது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் இன மத வேறுபாடின்றிய கலாசார விடயங்களை மேலோங்க இவர் ஆற்றி வருகின்ற பங்களிப்புகளுக்காக மூவின அனைத்து கலைஞர்களும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த புதிய பொறுப்பிலும் தௌபீக் அவர்கள் மேலும் சிறப்பாகப் பணியாற்றி, கிழக்கு மாகாணத்தின் கலாசார மேம்பாட்டிற்கு மேலும் தனது பங்களிப்பினை வழங்குவார் என்பதுடன் அவரது எதிர்காலப் பணி சிறக்கவும், உடல் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் நீண்ட காலம் பணியாற்ற வேண்டுமெனவும் கலை உலகத்தினர் இவருக்கு
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *