உள்நாடு

ஒலுவில் துறைமுகப் பாதிப்பு குறித்து பேசிய ஜனாதிபதி ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி பாதிப்பு குறித்து பேசவில்லை; இம்ரான் எம்.பி கேள்வி

ஒலுவில் துறைமுகம் நிர்மாணம் விஞ்ஞான ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டது அல்ல என்றும் அதனால் கடலரிப்பு ஏற்படுவதாகவும் பேசிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி நிர்மாணத்தினால் ஏற்பட்ட கடலரிப்பு குறித்து பேசவில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் (30) சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,
அண்மையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஒலுவில் துறைமுக நிர்மாணம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அது விஞ்ஞான ரீதியான சாத்தியக் கூற்று அறிக்கை பெறப்படாது அரசியல் நோக்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்டது என்றும் அதனால் தான் கடலரிப்பு ஏற்படுவதாகவும் கூறினார்.

இவரின் இந்தக் கருத்து அரசியல் நோக்கம் கொண்டது. மறைமுகமாக முன்னாள் அமைச்சர் மர் ஹூம் அஷ்ரப் அவர்களை குறைகூறும் நோக்கம் கொண்டது.

உண்மையில் இந்தத்துறைமுகம் ஆய்வுகள் எதுவுமின்றி நிர்மாணிக்கப்பட்டது என்றால் கடந்த 2 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் அவர் ஏன் இது குறித்து இதுவரை மாற்று நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை அல்லது இது குறித்து ஏன் முன்னர் கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை என்று கேட்க விரும்புகிறேன்.

அம்பாறை மாவட்டத்திற்கு வந்து தானா இந்தக் கருத்தை அவர் சொல்ல வேண்டும். அவர் இந்தக் கருத்தை இப்போது சொல்வதற்கு காரணம் அம்பாறை மாவட்ட மக்களின் மனங்களில் வாழும் மறைந்த மாமனிதர் அஷ்ரஃப் குறித்து குறைசொல்ல வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறில்லை.

கொழும்பு போர்ட் சிட்டி நிர்மாணமும் எவ்வித சுற்றாடல் ஆய்வுகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டது தான். இதனால் உஸ்வெட்டக் கெய்யாவ, வென்னப்புவ, நீர்கொழும்பு போன்ற பகுதிகள் அரிக்கப்படவதாக சூழலியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும், கடலின் அடியில் உள்ள வளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து ஜனாதிபதி எங்காவது பேசியுள்ளாரா? ஜனாதிபதியின் ஆட்சியில் கிழக்குக்கு ஒரு சட்டம் மேற்கிற்கு ஒரு சட்டமா?இவ்வளவு பாதிப்புகள் போர்ட் சிட்டியினால் ஏற்பட்டும் கூட அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளையும் தேவையன ஏனைய சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது.

எனவே, ஜனாதிபதி ஒலுவில் துறைமுகம் குறித்து தெரிவித்த கருத்து மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களை குறை சொல்லும் நோக்கம் கொண்டதே தவிர வேறு இல்லை என்பதுதெளிவாகின்றது.

(எம்.ஏ.முகமட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *