உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் (21) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *