உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிறார் மஹிந்த

ஸ்ரீலங்கன் விமான கொள்வனவு மோசடி தொடர்பாக விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமேஜ் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்:

“ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த வாக்குமூலமானது அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டது என கபில சந்திரசேன நீதிமன்றில் சத்தியக்கடதாசி மூலம் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அழைப்பாணை விடுக்கப்படுவது சட்டவிரோதமானது.”

இவ்விவகாரம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *