உள்நாடு

வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்திற்கான தீர்மானத்தை நீடிக்கும் விவாதத்தின் போது அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து வடகிழக்கில் பல தனியார் காணிகள் பாதுகாப்புத் தேவைகளுக்காக பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான காணிகளை தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்தி அவற்றை உரிய பொதுமக்களிடம் மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டதாக கூறினார்.

மேலும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அந்தக் காணிகளை பயன்படுத்தி அதற்கான வாடகை உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டும் என்ற கடுமையான உத்தரவும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்திலும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் தனியார் மற்றும் அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முன்வைத்த ஏறாவூர் பொலிஸ் நிலைய விவகாரத்தையும் குறிப்பிட்டார். அதேபோல் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பொலிஸ் நிலையமும் பொருத்தமான வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றார்.
அத்துடன் பாதுகாப்புப் படையினருக்கான நிரந்தர முகாம்கள் மற்றும் கட்டமைப்புகளை அரசாங்கம் திட்டமிட்டு அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

(கே எ ஹமிட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *