இலங்கையுடனான உறவை முழுக் கூட்டாண்மை உறவாக வலுப்படுத்துவதே எமது அடுத்த கட்ட நோக்கமாகும்; பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) இன்று (08) முற்பகல் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியை, இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம், விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அரச தலைவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
ஜனாதிபதி டோ லாம், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியமை குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கருத்துத் தெரிவித்ததுடன், தமது விசேட நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை,
இலங்கை மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களது நாட்டின் உன்னத சட்டவாக்க சபையான இலங்கை பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுவதற்கு கிடைத்தமை எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும். வியட்நாம் நாட்டின் கட்சி, அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, கௌரவ சபாநாயகரே, பாராளுமன்ற உறுப்பினர்களே, முழு இலங்கை மக்களே, உங்கள் அனைவருக்கும் எங்களது அன்பான வாழ்த்துகளையும் மனமார்ந்த சகோதரத்துவத்தையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வியட்நாம் தூதுக்குழுவினருக்கு வழங்கப்பட்ட மிகவும் அன்பான மற்றும் சகோதரத்துவம் மிக்க வரவேற்பிற்காக இலங்கை பாராளுமன்றத்திற்கும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல், பொருளாதார மீட்பு மற்றும் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் மக்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அதன் மூலம் பெற்றுள்ள அடைவுகளையும் நான் பாராட்டுகிறேன். நாகரிகத்தின் நீண்டகால பாரம்பரியம், இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய அமைவிடம், மக்களின் உறுதிப்பாடு மற்றும் தலைவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சமிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்பது எமது நம்பிக்கையாகும்.
வியட்நாம் மக்களின் வரலாற்று நினைவுகளிலும் இதயங்களிலும் இலங்கைக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. ஜனாதிபதி ஹோ சி மின் தனது புரட்சிகரமான செயல்பாட்டுக் காலத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் இங்கு தங்கியிருந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட அவரது உருவச்சிலை, இலங்கை மக்கள் வியட்நாம் மக்கள் மீது வைத்துள்ள அன்பின் அடையாளமாக மாறியுள்ளது.
வியட்நாம் மக்களுக்கு இது ஒரு தேசியத் தலைவரின் சுதந்திரப் போராட்டப் பயணம் மட்டுமல்ல, சுதந்திரம், அமைதி, மனிதநேயம் மற்றும் நீதியை மதிக்கும் இரு நாடுகளின் இயல்பான சந்திப்பாகும். ஜனாதிபதி ஹோ சி மின் ஒருமுறை கூறியது போல் “நாடு சுதந்திரம் பெற்றாலும் மக்கள் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியாவிட்டால், அந்த சுதந்திரத்தால் பயனேதுமில்லை.” இந்த சிந்தனை, சுதந்திரமான, அமைதியான மற்றும் வளமான நாட்டை விரும்பும் உங்கள் மக்களின் அபிலாஷைகளுடன் மிகச் சரியாகப் பொருந்திப் போகிறது.
புவியியல் ரீதியாக வியட்நாமும் இலங்கையும் தொலைவில் அமைந்திருந்தாலும், எமது வரலாறு, கலாசாரம் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகள் மிகவும் நெருக்கமானவை. இரு நாடுகளுமே நீண்டகாலப் பாரம்பரியங்களைக் கொண்டிருப்பதுடன் கருணை, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை மதிக்கின்றன. பௌத்த மதமும் கீழைத்தேய கலாசார விழுமியங்களும், ஒழுக்கநெறி, அமைதி, சகோதரத்துவம், கூட்டுமுயற்சி மற்றும் மனிதநேயத்தை வளர்ப்பதற்கு பங்களிப்புச் செய்துள்ளன.
1970 ஜூலை 21 அன்று இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்த நாள் முதல், அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் எமது உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளன. கடந்த ஆண்டு எமது உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடியதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு விஜயம் செய்து ஹோ சி மின் நகரில் நடைபெற்ற சர்வதேச வெசாக் கொண்டாட்டத்திலும் பங்கேற்றார்.
எமது உறவானது வெறும் இராஜதந்திர ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் கட்டமைக்கப்படாமல், இரு நாட்டு மக்களுக்கும் இடையே நிலவும் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இன்றைய தினம் இலங்கை பாராளுமன்றத்தில் வியட்நாமின் அபிவிருத்திப் பயணம், குறிப்பாக கடந்த 40 ஆண்டுகால ‘டொய் மொய்’ (Doi Moi) சீர்திருத்தங்கள் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள எனக்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
40 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1986 இல் ‘டொய் மொய்’ திட்டத்தை ஆரம்பிக்கும் போது வியட்நாம் கடுமையான சவால்கள் பலவற்றை எதிர்கொண்டிருந்தது. யுத்தத்தினால் சீரழிந்த உட்கட்டமைப்பு வசதிகள், ஸ்தம்பித்த பொருளாதாரம் மற்றும் மக்களின் பாதிக்கப்பட்ட வாழ்க்கை நிலைமைகளுக்கு மத்தியில் நாம் இந்த புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தோம்.
‘டொய் மொய்’ என்பது அடிப்படையில் ஒரு புதிய சிந்தனையாகும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் நாம் உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், காலாவதியான நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதையும், மக்களின் படைப்பாற்றல் மற்றும் வணிகத் துறையின் பங்களிப்பைப் பெற வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்து கொண்டோம்.
அதன்படி, நாம் மத்தியமயப்படுத்திய திட்டமிடப்பட்ட மானியங்களை நம்பியிருந்த பொருளாதாரத்திலிருந்து சோசலிச அபிலாஷைகளைக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தோம். ஆட்சியாளர், வழிகாட்டி, வசதிகளை வழங்குபவராக பொருளாதார வளங்களை உச்சளவில் பயன்படுத்தி செயல்படுவதோடு, சந்தைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து சர்வதேச உறவுகளை முறையாகப் பேணுவது அதில் அரசாங்கத்தின் வகிபாகமாகும்.
விவசாயத் துறையில் வியட்நாம் தன்னிறைவு அடைந்தது மட்டுமன்றி, உணவுத் தட்டுப்பாடு நிலவிய ஒரு நாடு உலக அளவில் முன்னணி விவசாய ஏற்றுமதியாளராகவும் மாறியது. வெளிநாட்டு முதலீடுகளுக்கான கதவுகளைத் திறந்து தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளை மேம்படுத்திய நாம், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைந்தோம்.
இந்த உறவுகளை வளர்த்துக் கொள்ளும்போது சுயநம்பிக்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டு செயல்படுவது முக்கியமாகும். வியட்நாம் பன்முகப்படுத்தப்பட்ட சர்வதேச உறவுகளைப் பேணும்போது, சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் நம்பிக்கையைப் பாதுகாக்கும் ஒரு பொறுப்பு வாய்ந்த பங்காளியாகவும் நண்பனாகவும் திகழ அர்ப்பணிப்புடன் உள்ளது.
இச்சீர்திருத்தங்களின் விளைவாக, சமூக-பொருளாதாரத் தரவுகளின்படி உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதில் உலகின் மிகவும் வரிய 20 நாடுகளுக்குள் இருந்த வியட்நாம், இன்று உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதேபோன்று, உலகின் மிகப்பெரிய 32 பொருளாதாரக் குடியரசுகளில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டளவில் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 514 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், தனிநபர் வருமானம் 5,000 டொலர்களைத் தாண்டியது. உலகின் முன்னணி பொருளாதாரங்களைக் கொண்ட முதலீட்டு இலக்காகவும், இருபதுக்கும் மேற்பட்ட இலவச வர்த்தக ஒப்பந்தங்களிலும் நாம் கைச்சாத்திட்டுள்ளோம்.
எமது பயணத்தில் இருந்து வளரும் நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. உலகின் முன்னணி பொருளாதார முதலீட்டு இலக்குகளுக்கு மத்தியில் நாம் இருப்பதுடன், பிரதான பொருளாதாரங்களைக் கொண்ட அறுபது நாடுகளுடன் பொருளாதார உறவுகளைக் கட்டியெழுப்பி, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் இலவச வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டு, நம்பிக்கைக்குரிய பங்காளியாகச் செயல்பட எம்மால் முடிந்துள்ளது.
எமக்கு இன்னும் சவால்கள் உள்ளன. உலகளாவிய சவால்களை நாம் வென்று வருகிறோம். இப்பயணத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் பல உள்ளன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அவை முக்கியமானவையாகும். தேசிய சுதந்திரத்தையும் சுயநம்பிக்கையையும் பாதுகாத்துக் கொண்டு, உலகத்துடன் தீவிரமாக இணைந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டுத் திறன்களைக் கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு நாடும் தங்களது சட்டபூர்வமான தேவைகளைப் பாதுகாத்துக் கொண்டு, தங்களுக்குப் பொருத்தமான அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு சுதந்திரம் மற்றும் சுயநம்பிக்கை என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். சுயநம்பிக்கை என்பது தனிமைப்படுத்தல் அல்ல. இதன் பொருள் என்னவென்றால், சமத்துவம், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்துப் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதும், அதற்கான நம்பிக்கையையும் பலத்தையும் கொண்டிருப்பதாகும்.
வியட்நாம் உள்நாட்டு வலிமையைத் தீர்மானமிக்க காரணியாகவும், வெளிவாரி வளங்களை ஒரு முக்கியமான காரணியாகவும் கருதுகிறது. உள்நாட்டு வலிமை என்பது மக்களின் நிறுவனங்கள், எமது கலாசாரம், எமது பாரம்பரியங்கள், மக்களின் அபிலாஷைகள் மற்றும் மக்களின் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாகும்.
வெளிவாரி வளங்கள் என்பது சர்வதேச சமூகத்திடமிருந்து பெறப்படும் அறிவு மற்றும் சந்தை, தொழில்நுட்பம், முதலீடு மற்றும் முகாமைத்துவ அறிவாகும். அபிவிருத்தி என்பது இந்த இரு சக்திகளினதும் இணைப்பிலேயே தங்கியுள்ளது. சர்வதேச ஒத்துழைப்பு பெரிய கதவுகளைத் திறக்கிறது, ஆனால் உள்நாட்டுச் சக்தியே இன்னும் தீர்மானமிக்க பங்கினை ஆற்றுகிறது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வது அவசியமானது என்றாலும், அது மட்டுமே போதுமானதாக அமையாது. நிலையான அபிவிருத்திக்குத் தேவையான திறன் மற்றும் மனித வளத்தை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், புத்தாக்கங்களை மேம்படுத்துவதும் அவசியமாகும்.
வியட்நாம் பாரம்பரிய மூலதனம் மற்றும் மனித உழைப்பை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியிலிருந்து விடுபட்டு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல், பசுமை மாற்றம் மற்றும் தரமான மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி நகர முயற்சித்து வருகிறது. இந்த வளர்ச்சியை வலுப்படுத்துவதில் சட்டத்தின் ஆட்சி, பாராளுமன்றம் மற்றும் தேசிய நிர்வாகத்தை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.
புத்தாக்கம் என்பது சிந்தனையிலிருந்து தொடங்க வேண்டும். படைப்பாற்றல் மிக்க அபிவிருத்திக்கு இணக்கமான, நிலையான மற்றும் உறுதியான நியாயமான சட்டபூர்வமான அடிப்படைத் தேவைப்படுகிறது. ஒரு புதிய பாதை திறக்கப்படுமாயின், அது சட்டம், பொறுப்புக்கூறல் மற்றும் மக்களின் விருப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை பாராளுமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
அபிவிருத்திக்கான செயல்பாடுகளை நிறுவனமயப்படுத்தல், சட்டங்களை இயற்றுதல், தீர்மானங்களை எடுத்தல், போட்டித்தன்மை, கண்காணித்தல் மற்றும் எமது அபிலாஷைகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் இது தேசிய ரீதியாக முக்கிய பங்கினை ஆற்றுகிறது.
இன்று நான் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னிலையில் உரையாற்றும்போது, நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல் ஆகியவற்றில் இச்சட்டவாக்க மன்றங்கள் ஆற்றும் பங்கு மிகவும் தெளிவாகப் புலனாகின்றது.
மிகவும் துல்லியமான கொள்கையின் அடிப்படையில் ஒட்டுமொத்த துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அங்கு சரியான அபிவிருத்திச் சிந்தனை ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு புதிய பாதையைத் திறந்துவிடும்.
வியட்நாமின் ‘டோய் மோய்’ (Doi Moi) சீர்திருத்தங்கள் என்பது பல திறந்த பொருளாதாரக் கொள்கை மாற்றங்களை மட்டும் குறிப்பதல்ல, மாறாக அபிவிருத்தி மற்றும் அரசு, சந்தை, மக்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்களிப்பை நாம் நோக்கும் விதத்தையும் அது மாற்றியமைக்கிறது.
இவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும், மதிப்பாய்வு செய்வதை ஒழுங்குபடுத்துவதும் மற்றும் மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். அதேபோன்று, உச்ச நிலைப்பாடுகளுக்கு செல்லாமல், ‘டோய் மோய்’ சீர்திருத்தங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.
வியட்நாமிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நாம் புறநிலைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதாகும்.
அபிவிருத்தியின் நோக்கம் என்பது, அபிவிருத்தியின் இயக்கு சக்தியான மக்களை எப்போதுமே இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதாகும். அபிவிருத்தி என்பது வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மாத்திரமல்ல. மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை அமைவது, பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி கிடைப்பது, ஊழியர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகள் இருப்பது, சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே ஆகும்.
எனவே, மக்களே முதன்மையானவர்கள் என்பதை எப்போதும் மனதில் கொண்டு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு சமூக நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமிய அபிவிருத்தி ஆகியவற்றை ஒன்றிணைக்கிறோம். மக்கள் வெறும் பயன் பெறுபவர்களாக மட்டும் இருக்காமல், அவர்கள் புத்தாக்க சிந்தனையாளர்களாகவும், பங்கேற்பாளர்களாகவும் மற்றும் பங்குதாரர்களாகவும் இருக்க வேண்டும்.
விவசாயம், விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களின் ஸ்திரத்தன்மை என்பது அபிவிருத்திக்கு அவசியமான ஒரு காரணி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பல வளரும் நாடுகளில் விவசாயம் என்பது பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் ஒன்றாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி அது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மற்றும் கலாசார நெருக்கடிகளைத் தாங்கும் திறன் கொண்ட ஒரு துறையாகப் பிணைந்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
வியட்நாமின் ‘டோய் மோய்’ (Doi Moi) சீர்திருத்தங்களில் பெரும்பகுதி விவசாயம் மற்றும் கிராமப்புறங்களிலிருந்தே தொடங்கின. எங்களது அனுபவத்தின்படி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விவசாய உற்பத்திகளை அதிகரித்தல், அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்துதல் முறைகளை மேம்படுத்துதல் மற்றும் சந்தை நாமங்களை உருவாக்குதல் ஆகியவை அத்தியாவசியமானவை என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.
அபிவிருத்தி என்பது மிக வேகமாக மாறிவருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம், காலநிலை மாற்றம், விநியோக சங்கிலி மாற்றங்கள், மூலோபாயப் போட்டிகள் நாடுகளுக்கு வாய்ப்புகளையும் அதே வேளையில் சவால்களையும் உருவாக்குகின்றன.
சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் எமது இலக்குகளை நனவாக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கே உரிய வரலாறு, கலாசாரம், வளங்கள் மற்றும் தெரிவுகள் உள்ளன. நாங்கள் பயணித்த பாதையில் அடைந்த வெற்றிகளையும் தோல்விகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதனை நீங்கள் திறந்த மனதுடன் அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள்.
எமது நீண்டகால உறவுகளைப் பற்றி பேசுகையில், இலங்கையுடன் மிகவும் ஆழமான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் பயனுள்ள ஒரு புதிய அத்தியாயத்தைத் திறப்பதே எமது எதிர்பார்ப்பாகும். எமது அரசியல் நம்பிக்கை, பாரம்பரிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தின் அடிப்படையில், வியட்நாம் மற்றும் இலங்கை இடையிலான உறவு ஒரு விரிவான பங்களிப்பாக உயர்ந்துள்ளது என்பதை உங்கள் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இது அரசியல், பொருளாதாரம், முதலீடு, விவசாயம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளில் பன்முகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சூழலை உருவாக்குகிறது.
இருப்பினும், தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், காலநிலை மாற்றம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற பல புதிய சவால்கள் எமக்கு முன்னால் இருப்பதை நாம் அறிவோம். அபிவிருத்தி என்பது ஒரு தொடர்ச்சியான பயணம். எங்களது அனுபவங்களின் அடிப்படையில் நாங்கள் கற்றுக்கொண்ட சில பாடங்கள் பின்வருமாறு:
- தேசிய சுதந்திரம் மற்றும் உலகத்துடன் இணைதல்: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் அதே வேளையில், உள்நாட்டு பலத்தை கட்டியெழுப்புவது அவசியமானது.
- சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி: நிலையான வளர்ச்சிக்கு வெளிப்படையான சட்டக் கட்டமைப்பு அவசியம். இதில் பாராளுமன்றத்தின் பங்கு தீர்க்கமானது.
- மக்களை மையப்படுத்திய வளர்ச்சி: வளர்ச்சியை வெறும் GDP புள்ளிவிவரங்களால் மட்டும் அளவிடாமல், மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு அளவிட வேண்டும்.
- விவசாயத்தை அடிப்படையாகக் கொள்ளுதல்: வளர்ந்து வரும் பல நாடுகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூக ஸ்திரத்தன்மையின் அடிப்படையாக விவசாயமே அமைகிறது.
வியட்நாமின் நோக்கம் 2030-ஆம் ஆண்டளவில் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவும், 2045-ஆம் ஆண்டளவில் முன்னேறிய, அதிக வருமானம் கொண்ட நாடாகவும் மாறுவதாகும். இலங்கையுடன் ஒரு புதிய ஒத்துழைப்பு அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை “முழுமையான கூட்டாண்மை” (Comprehensive Partnership) நிலைக்கு உயர்த்துவதற்கு நாங்கள் உடன்பட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் கீழ் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும். குறிப்பாக:
•இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல்.
•விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
•டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பசுமை வளர்ச்சி போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
•சுற்றுலாத்துறை மற்றும் பௌத்த உறவுகளை வலுப்படுத்துதல்.
•சர்வதேச மேடைகளிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் ஒத்துழைப்புடன் செயற்படுதல்.
சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் மோதல்கள் மூலம் அதிகாரத்தைத் தேடுவதற்குப் பதிலாக, சர்வதேச சட்டம், ஒத்துழைப்பு மற்றும் நல்லாட்சி மூலம் பலத்தை பெற வேண்டும். யுத்தத்தின் கசப்பான அனுபவங்களைச் சந்தித்த ஒரு தேசம் என்ற ரீதியில், அமைதியின் மதிப்பை நாங்கள் நன்கு அறிவோம்.
ஹனோயிலிருந்து கொழும்பு வரை, கிழக்குக் கடலிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை எங்களிடம் ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது: அதாவது அமைதியே எமது அடிப்படை, மக்களே எமது மையம், வளர்ச்சியே எமது இலக்கு.
இலங்கை பாராளுமன்றம் மக்களின் அபிலாஷைகளின் அடையாளமாக என்றும் திகழட்டும்! இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அமைதியும் சுபிட்சமும் உண்டாகட்டும்! வியட்நாம்-இலங்கை நட்பு நீடூழி வாழட்டும்! உங்கள் அனைவருக்கும் நன்றி. என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
