சாய்ந்தமருது தனியான நகர சபை பிரகடனம், பாடுபட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்; சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக்
சாய்ந்தமருது தனியான நகர சபை பிரகடனத்துக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் என சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாறக் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையான சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை தேவை என்ற கோரிக்கைக்கு அமைவாக, ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டபூர்வமானது எனவும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லையை இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயித்து தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை உறுதிசெய்யப்பட்டதை முன்னிட்டு, துஆப் பிரார்த்தனை செய்யும் நிகழ்வும் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்காக முழு மூச்சாக நின்று உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இன்று (08) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நன்றி கூறி உரையாற்றிய வேளை, இதற்காக அரும்பாடுபட்ட அனைவருக்கும் தமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தமது நன்றியுரையில் அவர் மேலும் கூறியதாவது,
மதிப்பிற்குரிய உலமாக்களே, ஊர்பிரமுகர்களே வர்த்தக பெருமக்களே, கல்விமான்களே, மீனவர்களே, அன்புக்குரிய பெரியோர்களே, சகோதரர்களே, இளைஞர்களே மற்றும் எனது பாசத்திற்குரிய மருதூர் மண்ணின் மைந்தர்களே!
வீடுகளில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்பின் ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்!
நமது சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையான சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை தேவை என்ற கோரிக்கைக்கு அமைவாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டபூர்வமானது எனவும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லையை இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயித்து தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை உறுதிசெய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்!
நமதூருக்கான தனியான சபை என்ற இலக்கை அடைந்ததற்கு முக்கிய காரணம் நமது மருதூரின் ஒற்றுமையும் ஓரணியில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு தனியான நகரசபை சாய்ந்தமருதுக்கு வேண்டும் என்ற ஒருமித்த கோஷத்தோடு செயற்பட்ட சமூக போராட்டமும், எங்கள் ஒவ்வொருவரினதும் துஆக்களினதும் பிரதிபலனாகும்.
இந்த இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் பெயர்சொல்லி குறிப்பிட வேண்டியவர்கள் மிக அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். நேர முகாமைத்துவத்தை கருதி முக்கியமான சிலரை ஞாபகப்படுத்துகின்றேன்.
எங்களின் இந்த நகர சபை இலக்கை நோக்கி பயணிக்க சாய்ந்தமருது ஊரை ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப் படுத்தி எங்களுக்கு தலைமை வகித்த சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் மர்ஹும் வை.எம். ஹனீபா சேர் அவர்களின் ஆளுமையையும், செயற்பாட்டையும் எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக! ஆமீன்.
அதேபோல எங்களின் கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டு சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட பக்கபலமாக இருந்த முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்கள் செய்த வரலாற்று உதவியை நாங்கள் என்றென்றும் நன்றியுணர்வுடன் ஞாபகமூட்டி எங்களது ஊர்மக்கள் அனைவரது சார்பாகவும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது ஊரின் முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் சேர் அவர்கள் இந்த சபைக்கான முயற்சியில் மூளையாக செயற்பட்டு நிர்வாக மற்றும் அரசியல் ரீதியாக வழி நடத்தியதை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.
அத்தோடு, எமது கௌரவ முன்னாள் மாநகர சபை சுயேட்சை உறுப்பினர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவூட்டுகின்றேன்.
இந்த நகரசபை போராட்டத்திற்காக நிதிப் பங்களிப்பு செய்த வர்த்தகர்கள், தனவந்தர்கள் உடல் ரீதியாக பங்களிப்பு செய்த இளைஞர்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊர்மக்கள் அனைவருக்கும் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்ட அனைவருக்கும் எங்களது கோடான கோடி நன்றிகளும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.
இந்தப் போராட்டத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து வழக்குகளையும், விசாரணைகளையும், பல இன்னல்களையும் எதிர்கொண்ட இளைஞர்களுக்கு எங்களது நன்றிகளும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ஈருலக வெற்றியையும் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
இறுதியாக நமது வர்த்தமானி அறிவித்தல் சட்ட பூர்வமானது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சேர் அவர்களுக்கும் முன்னாள் மாநகர சபை சுயேட்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் அவர்களுக்கும் நமது ஊர்மக்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு, இந்த உயர் நீதிமன்ற வழக்கிற்காக பண உதவி மற்றும் உடல் உதவி செய்தவர்களுக்கும் நன்றி சொல்வதோடு, இந்த வரலாற்று நீதியை பெற்றுத் தந்த பிரபல சட்டத்தரணிகளுக்கும் எங்களது சாய்ந்தமருது மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சாய்ந்தமருது மக்களாகிய நாம் அரசியலில் கட்சிரீதியாக எந்த அணியில் பிரிந்து இருந்தாலும் எங்கள் அனைவரதும் இலக்கு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றமே!
அந்த வகையில் இந்த நகரசபையின் அடுத்த கட்ட செயற்பாடுகளான எல்லை நிர்ணயம் வட்டாரப் பிரிப்பு போன்ற நகரசபை செயற்பாடுகளுக்கு எமது ஊரின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா சேர் அவர்கள் எதிர்காலத்தில் முழு முயற்சி செய்து சாய்ந்தமருது நகர சபையை நடைமுறைச் செயற்பாடுகளுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் மிகவும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
“இறுதியாக,
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாம் நிதானத்தை இழந்துவிடக் கூடாது. நமது வெற்றி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. மிகவும் கண்ணியமான முறையில் அல்லாஹ்வுக்கு நன்றி கூறி, இந்த வெற்றியை அனுஷ்டிப்போம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது சாய்ந்தமருது மண்ணை செழிக்கச் செய்வானாக! இந்தப் புதிய உள்ளூராட்சி சபை மூலம் நமது மக்களின் வாழ்வாதாரமும், உட்கட்டமைப்பும்,கல்வித் தரமும் உயரட்டும். நாம் அனைவரும் கைகோர்த்து, ஒரு பலமான, வளமான சாய்ந்தமருதை உருவாக்குவோம் என்று இந்த புனிதமான பள்ளிவாசல் முன்றலில் நின்று உறுதி ஏற்போம்.
எமது மண்ணின் உரிமை எமது கையில்! வெற்றி நிச்சயம்! அல்லாஹூ அக்பர்! வாழ்க சாய்ந்தமருது! என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் துஆப் பிரார்த்தனையை சாய்ந்தமருது ஹுதாப் பள்ளிவாசல் பேஷ்இமாம் எம்.எச்.எம். நப்றாஸ் (றஹ்மானி) மேற்கொண்டார்.
இதன்போது சாய்ந்தமருதூர் மக்கள் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் முகமாக ஒருவருக்கொருவர் முஸாபஹா செய்து, இனிப்புக்கள் வழங்கி, தமது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தியதையும் காணக் கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வில், முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் மாநகர சபை சுயேட்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.





(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
