உலகம்

ஆளுநரின் முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாதுதமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிடம் பெரும்பான்மை இல்லை. பலத்தை நிரூபித்தால்தான், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும் ஆளுநர் மாளிகை அறிக்கை

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிடம் பெரும்பான்மை இல்லை. பலத்தை நிரூபித்தால்தான், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். சட்டசபையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென கவர்னர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, தவெக தலைவர் விஜய் புதன்கிழமை மாலை கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

இந்த பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் வியாழக்கிழமை காலை மீண்டும் கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கவர்னரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. கவர்னர் – விஜய் இடையேயான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.

விஜய்யிடம் கவர்னர் எழுப்பிய கேள்விகள்..:-113 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்?. 234 எம்எல்ஏக்களை கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் 113 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு நிலையான அரசு அமைக்க முடியுமா..?. 113 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் வேறு எந்த கட்சிகளின் ஆதரவு தவெகவிற்கு கிடைக்கும்..?. இவ்வாறு கேள்விகள் கேட்டுள்ளார்.

ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிடம் பெரும்பான்மை இல்லை. பலத்தை நிரூபித்தால்தான், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். சட்டசபையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது.

தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்த வேண்டும். கவர்னரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது.பெரும்பான்மை இருக்கிறது என விஜய் நிரூபித்தால் அடுத்த நிமிடம் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். தமிழ்நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதில் கவர்னர் உறுதியாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு விளக்கங்களை கூறி கவர்னர் தற்போதைய சூழலில் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை இருக்கிறது என நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில் சட்ட நிபுணர்களுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். ஆட்சியமைக்க கவர்னர் இதுவரை அழைப்பு விடுக்காத நிலையில் ஆலோசனை நடந்து வருகிறது.

விஜய் பதவியேற்பு நிகழ்வு குறித்தும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும் தவெக எம்.எல்.ஏ.க்களுடன் பனையூரில் செங்கோட்டையன் ஆலோசனை செய்து வருகிறார். தமிழக ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்து பேச்சு நடத்தியிருந்த நிலையில் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *