உள்நாடு

மருதானை கடற்கரையை சுற்றுலா மையமாக மாற்றும் BUSF-இன் திட்டம் : களத்தில் இறங்கிய நகரபிதா!!

பேருவளை மருதானை கடற்கரை மற்றும் Bent பகுதியை தூய்மைப்படுத்தி, பாதுகாப்பான சுற்றுலா வலயமாக மாற்றும் திட்டத்தை நேரில் ஆராய்வதற்காக, பேருவளை நகரபிதா கௌரவ மபாஸிம் அஸாஹிர் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) குறித்த பகுதிக்கு விசேட களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.“Beruwala Unity & Social Forum” (BUSF) அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவை அடுத்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில் இந்த விஜயம் அமைந்தது.

இதன்போது, கடற்கரை ஓரத்தில் நிலவும் சமூகச் சீர்கேடுகள், பற்றைக்காடுகள் மண்டியுள்ள பகுதிகள் மற்றும் கடற்கரையின் தூய்மை குறித்து நகரபிதா விரிவாக ஆராய்ந்தார்.BUSF அமைப்பின் சமூக நல ஒருங்கிணைப்பாளர்களான முஹம்மத் நவீத் மற்றும் பாத்திமா பஸ்லா அவகள் , இப்பகுதியை எவ்வாறு மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு குடும்பப் பூங்காவாகவும், இரவு நேர உணவகங்கள் மற்றும் நூலகம் கொண்ட நவீன மையமாகவும் மாற்றலாம் என்பது குறித்து நகரபிதாவிற்கு விளக்கமளித்தார்.

ஆய்வின் பின்னர் கருத்துத் தெரிவித்த நகரபிதா, “இளைஞர்கள் முன்னின்று முன்னெடுக்கும் இவ்வாறான சமூக மாற்றத்திற்கான திட்டங்களை நாம் வரவேற்கிறோம். மருதானை கடற்கரையை ஒரு முன்மாதிரியான இடமாக மாற்ற நகரசபை தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்” என உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது BUSF அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நகரசபை அதிகாரிகளும் உடனிருந்தனர். இந்த களவிஜயத்தைத் தொடர்ந்து, முதற்கட்ட துப்பரவுப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(பேருவளை : பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *